Saturday, September 13, 2014

இறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை இணையதள உறவுகள்! உண்மை! ஆமே!


மறவாமல் நாள்தோறும் தொழுவோன் உன்னை –ஏழு
மலைவாச காப்பவன் நீதான் என்னை
உறவானார் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார் –வரின்
உதவிட வேண்டுமே! அச்சம் கண்டார்
இறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை
இணையதள உறவுகள்! உண்மை! ஆமே!
பிறவாத உடன்பிறப்பே ! அவர்கள் இன்றும் – வந்து
பேசுகின்றார் !என்னோடே வாழ்க என்றும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, September 12, 2014

கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!


கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த
கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!
கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்
கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?
நிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்
நிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்
வலைவீசி தேடுவதாய் காவல் துறையும் –செய்தி
வருகிறது! என்னபயன்! எப்படிக் குறையும்!?

பொதுமக்கள் ! நமக்குமிதில் பொறுப்பு வேண்டும்-வீட்டைப்
பூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்!
எதுவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு
ஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்!
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
முறையாக தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
இதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ
இயன்றவரை நமைக்காக்க முயலின்! உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 9, 2014

தேக்கம் இன்றி கவிதைகளைத் தெளிவாய் நானும் எழுதிடவே!



முன்னுரை

கண்ணாய் விளங்கும் நண்பர்களை
கவிதை நடையில் எழுதுமென
அண்ணா என்றே ஆணையிட்ட
அன்பு சோதரி இராஜேஷ்வரிக்கு
நன்றி நன்றி நன்றி


நண்பர்கள் பட்டியல் பெரிதாமே
நவிலுதல் எனக்கே அரிதாமே
பண்பொடு பழகினர் அவர்தாமே
பலரை விட்டால் தவறாமே

ஆனால் சொல்ல ஆகாதே
அதனால் அவர்மனம் நோகாதோ
நானாய் எடுத்த முடிவொன்றே
நன்கே ஆய்ந்து சரியென்றே

பள்ளி தொட்டு இன்றுவரை
பாசம் காட்டி பழகியுரை
அள்ளிக் கொட்ட அன்பாலே
அணைத்தான் அவனே பண்பாலே

சொல்லப் பெருமிதம் கொள்கின்றேன்
சொல்லின் அவன்பெயர் சதாசிவம்
எள்ளுள் இருக்கும் எண்ணையென
என்னுள் அவனது அன்பேசிவம்
இன்று
கருத்தை அச்சில் தட்டுகிறேன்
கவிதையாய் வலையில் தீட்டுகிறேன்
திருத்த வேண்டின் திருத்துகிறேன்
தினமும் வலையில் பொருத்துகிறேன்
அன்று
எழுதி அடித்து எழுதிடுவேன்
எடுத்து அதனை படித்திடுவான்
பழுதே இன்றி படியெடுத்து
படிக்க என்னிடம் கொடுத்திடுவான்
அவனே
என்றும் எந்தன் உயிர்நண்பன்
எழுமை பிறப்பிலும் தொடர்நண்பன்
நன்றி மறவேன் என்நண்பா
நலமுற வாழ வாழ்த்துப்பா

தேக்கம் இன்றி கவிதைகளைத்
தெளிவாய் நானும் எழுதிடவே
ஊக்கம் தந்தது அவனன்றோ
உரமாய் இருந்தது அவனன்றோ

புலவர் சா இராமாநுசம்   ( மீள்பதிவு)

Saturday, September 6, 2014

உளருவாயன் தன்னைவிட ஊமையன் மேலாம்! –என்ற உண்மைதனை உணர்த்தவந்த, உத்தமரே ! போலாம்!




குமரியைக் கேரளாவுடன் சேர்ப்பேன் என்றே-குழம்பி
கூறுகின்றார் பொன்னரவர் அமைச்சர் இன்றே
எமதருமைத் தமிழரிவர் ! என்னே! என்னே !-உலகில்
எங்கேயும் காணாத பிறவி முன்னே!

உளருவாயன் தன்னைவிட ஊமையன் மேலாம்! –என்ற
உண்மைதனை உணர்த்தவந்த, உத்தமரே ! போலாம்!
களறுநிலம் பாடுபட்டும் பயிர்விளைதல் ஆகா !-பிரதமர்
கண்டுவுடன் நீக்காவிடில் தீமையென்றும் போகா!

ஊதுகின்ற சங்கையிங்கே ஊதிவிட்டோம் நாமே-இதை
உணர்ந்து, நடப்பதினி ஆள்வந்தார் தாமே!
சாதுமிரண்டால் காடுகொள்ளா..! பழமொழிதான் அறிவீர்!- தமிழன்
சாதுதான்! மிரண்டுவிட்டால் …?நாடுகொள்ளா..! புரிவீர்!

புலவர் சா இராமாநுசம்

Friday, September 5, 2014

பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை படிக்கின்ற மாணவர் உணரவே கூறும்


எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மாணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு-(2011)

Thursday, September 4, 2014

போகப் போகத் தெரியும் –மரைப் பூவின் வாசம் புரியும்


போகப் போகத் தெரியும் –மரைப்
பூவின் வாசம் புரியும்
ஏகம் இந்தியா என்றே- நிலை,
இருக்குமா ! இல்லையா !நன்றே!
சோகம் தீரும் என்றார்!-உறுதி
சொல்லி அவரும் நின்றார்!
தாகம் தீர வில்லை-மேலும்
தருவ தென்னவோ தெல்லை!

பானை சோறு பதமே- நாம்
பார்கு மந்த விதமே
ஆன தய்ய நன்றே!-நடக்கும்
ஆட்சி முறையும் இன்றே!
போன ஆட்சி போன்றே-நீரும்
போவ தேனோ இன்றே
கானல் நீரா ஐய்யா-மக்கள்
கண்ட கனவு பொய்யா

எதிலும் தெளிவே காணோம்!-விலை
ஏற்றம் உயர்வே! நாணோம்!
பதிலும் முறையாய் இல்லை-போகும்
பாதை நீங்கத் தொல்லை!
மதில்மேல் பூனை ஆக- மக்கள்
மனமே மயங்கிப் போக,
விதியே இதுதான் போலும்-என்ற
வேதனை நாளும் மூளும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 2, 2014

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே!



இனிய உறவுகளே !

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே

உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!

நன்றி! வணக்கம்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...