Friday, January 27, 2017

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!


குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே



காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே

புலவர் சா இராமாநுசம்

Saturday, January 21, 2017

கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும்!


கொட்டும் மழையே என்றாலும்-கடும்
குளிரைப் பனியே தந்தாலும்
திட்டம் தீட்டிப் அறப்போரை-மேலும்
தீவிரம் ஆக்கும் மறவோரே
இட்டம் பேல நடவாமல்-அறத்தின்
எல்லை தான்னைக் கடக்காமல்
கட்டுப் பாடய் நடக்கின்றீர்!-கடமை
கண்ணியம் பேணிக் காக்கின்றீர்


புலவர் சா இராமாநுசம்

வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே
திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே
வரலாறு காணாத போராட்டம் கண்டீர்
வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்
தரமான அறவழியே போராட்டம் போக
தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக
சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே
சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?


புலவர் சா இராமாநுசம்

Saturday, January 14, 2017

புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே?



புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில்
புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே
சத்தான நீரின்றி நாடு முழுதும்-பயிர்
சாவியே! உழவன்தன் குடும்பம் அழுதும்
நித்திரை கலையாத அரசுகளே ஆள-அந்த
நிலைகண்டு தாளாத பல்லுயிர் மாள
இத்தரை தன்னில் நாம்காணும் காட்சி-ஏக
இந்தியா என்பதின் மாண்புறு மாட்சி!


புலவர் சா இராமாநுசம்

போகி விழா கவிதை!



வேண்டாத பொருள்களையே வீட்டை விட்டே
வீசியதை விடிகாலை அனலில் இட்டே!
ஆண்டாண்டு காலமாக போகி என்றே
அழைத்திட்ட உழவனவன் அழுது இன்றே
பூண்டோடு பூண்டாக பயிரும் மாய!
பசியோடு இல்லத்தில் வயிரும் காய
கூண்டோடு அழிவானோ தெரிய வில்லை!
குடும்பத்தில்! துயருக்கு எதுதான் எல்லை!?


புலவர் சா இராமாநுசம்

Sunday, January 1, 2017

பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம் பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக!


பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம்
பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக
தாங்கொணா துயரத்தால் இரண்டே நாளில்-அந்தோ
தன்னுயிரைத் பதினெட்டு பேரும் தந்தார்
ஆங்கிலப் புத்தாண்டே அடுக்கும் செயலா-உந்தன்
ஆரம்பம் இதுவானால் வாழ்வே புயலா
தீங்கின்றி நீசெல்ல தூண்டு கின்றோம்-காக்க
தெய்வத்தை மறவாது வேண்டு கின்றோம்!


புலவர் சா இராமாநுசம்

Friday, December 30, 2016

முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!




படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...