Sunday, January 28, 2018

எதுதடையோ யானறியேன் தமிழ்மணமே ஏற்றபதில் தருவாயா தமிழ்மணமே





பதிவுகளை ஏற்றதாகத் தமிழ்மணமே
  பட்டியலும் இட்டாயே தமிழ்மணமே
இதுவரையில் ஒன்றுகூட தமிழ்மணமே
  ஏனோதான் வரவில்லை தமிழ்மணமே
முதுமையிலும் எழுதுகிறேன் தமிழ்மணமே
  முதுகுவலி வாட்டினாலும் தமிழ்மணமே
எதுதடையோ யானறியேன் தமிழ்மணமே
  ஏற்றபதில் தருவாயா தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்


Friday, January 26, 2018

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!



ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் குடி
   அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்!
ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி என்றும்
   ஈடில்லா தலைவர்கனின்  நினைவை  போற்றி!
மீண்டுமீண்டும்   நடக்கின்ற சடங்காம்  என்றே-இதன்
    மேன்மைதனை உணராதும் செய்வார்  இன்றே!
வேண்டியிதை  அந்நாளில்  செய்தார்  தியாகம் நாட்டு
    விடுதலைக்கே  உயிர்பலியே  தந்தோர்  ஏகம்!
 
தன்னலமே  ஏதுமின்றி  பாடும்  பட்டார் அடிமைத்
     தளைதன்னை  முற்றிலுமே  நீக்கி  விட்டார்!
என்னலமே  பெரிதென்பார்  கையில்  தானே நாடும்
    எள்ளுகின்ற  நிலைதானே,   அனைத்தும்  வீணே!
இன்னலதே   நாள்தோறும்   வாழ்வில் ஆக மேலும்
    ஏழைகளோ  ஏழைகளாய்  மடிந்தே  போக!
மன்னரென  ஆனார்கள்  சிலரும்  இங்கே  - உண்மை
    மக்களாட்சி  காணாது   போன  தெங்கே ?
 
ஒப்புக்கே  நடக்கும்விழா   நாட்டில்,  முற்றும்  - எடுத்து
      உரைத்தாலும்   உணர்வாரா ? மக்கள்   சற்றும்!
தப்புக்கே  தலையாட்டும்   தாழ்ந்த  மனமே  - குடியால்
     தள்ளாடும்   ஐயகோ  மனித   இனமே!
எப்பக்கம்  நோக்கினாலும்   அவலக்  காட்சி
     எதிர்கால  வளர்ச்சிக்கு   இதுவா  மாட்சி!
செப்பிக்க  குடியரசு   இதுதான்  போலும் விளக்கி
     செப்பிடவே இயலாத கொடுமை  நாளும்!
                                            புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 24, 2018

வந்தது வந்தது தமிழ்மணமே-பலரும் வாழ்த்திட வந்தது தமிழ்மணமே!





வந்தது வந்தது தமிழ்மணமே-பலரும்
  வாழ்த்திட  வந்தது தமிழ்மணமே
தந்தது உவகையை  தமிழ்மணமே-ஏதும்
   தடையின்றி நீவர தமிழ்மணமே
நொந்தவர் துயர்கண்டு தமிழ்மணமே-மேலும்
   நோகாது காத்திட தமிழ்மணமே
சிந்தனை கொண்டாயோ தமிழ்மணமே-மீண்டும்
   செப்பினோம் வாழ்த்தினை தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

Monday, January 22, 2018

எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே!





எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே
   எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே
ஒப்பேது  இல்லையது தமிழ்மணமே-பலரும்
   ஓயாத கவலைமிக தமிழ்மணமே
தப்பேது தடங்கலுக்கு தமிழ்மணமே-ஏற்ற
   தடங்கண்டு சரிசெய்வாய் தமிழ்மணமே
செப்பேது உன்சேவை தமிழ்மணமே-மேலும்
   செம்மைமிக வந்திடுவாய் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, January 20, 2018

கடந்த ஆண்டு மாணவர் நடத்திய அறப்போர்!



வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே
திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே
வரலாறு காணாத போராட்டம் கண்டீர்
வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்
தரமான அறவழியே போராட்டம் போக
தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக
சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே
சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?


புலவர் சா இராமாநுசம்

Thursday, January 18, 2018

இனிய வலைப்பதிவு உறவுகளே! வணக்கம்!






இனிய வலைப்பதிவு  உறவுகளே!
       வணக்கம்!
    கடந்த  சில நாட்களாகவே  என் நெஞ்சில்
ஒரு நெருடல்! அது, எப்படி இருந்த  பதிவுலகம் இப்படி
ஆகிவிட்டதே என்ற ஆதங்கம்தான்   !இன்று என்னை
மேலும் வருத்தமுறச் செய்து  விட்டது தமிழ்மண
வாசகர் பரிந்துரையில் ஓர் இடுகை கூட இடம் பெற
வில்லை என்ற காட்சி!
     காரணம் நான்  உணர்ந்த வகையில் தமிழ்
மணத்தில் வைக்கப் பட்டுள்ள மதிப் பெண் பட்டையே
ஆகும் தெரிந்தோ தெரியாமலே, அறிந்தோ அறியாமலோ
உள்ளுற ஒரு போட்டி மனப்பான்மை வளர்ந்து  வருகிறது
என்பதே என்  தாழ்மையான  கருத்து! பதிவர்கள் எப்படிக்
கருதுகிறார்களோ  நான் அறியேன்!

      எனவே நான் இன்று  முதல் ஒரு முடிவெடுத்துள்ளேன்
மேலும் இது என் வேண்டு கோளாகவும்  அறிவிப்பாகவும் ஆகும்
அருள் கூர்ந்து ,இனி யாரும் என்பதிவுகளுக்கு ,மறுமொழி மட்டும்
போதும்  மதிப்பெண் போட வேண்டாம் என்பதோடு நானும்
யார் பதிவுக்கும் மறுமொழிமட்டுமே போட்டு மதிப்பெண்
 போடமாட்டேன்! என்பதை அன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்!  மன்னிக்க!

    புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, January 16, 2018

வள்ளுர் திருநாள் வாழ்த்துக் கவிதை!





வாழ்க்கைக்கே  வழிகாட்டும்  வள்ளுவமே-அதனை
   வரவேற்று  நாள்தோறும்  உள்ளுவமே
பாழ்பட்டு  போகாது ! அறிவீர்  என்றும் –அந்த
   பாதையில் போவதால் துயரம் ஒன்றும்
சூழாது  உலகினில் வாழ்வோம் நன்றே- என்றே
    சொல்வது மிகையல்ல !உண்மை இன்றே
வீழாது காத்திடும்  ஊன்று  கோலாம்- மேலும்
    விளக்கவே  வந்த  வள்ளுவர்  திருநாளாம்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...