மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரம் பெட்ரோல்விலை எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதியென்ப! இதுதான் போலும்!
ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி கலங்க விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -எதையும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!
புலவர் சா இராமாநுசம்

