ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே-மீண்டும்
ஆனந்த சுதந்திம் தேடு வோமே
எங்கும் சுதந்திரம் என்பது போச்சே-ஆனால்
எதிலும் சுயநலம் என்பதே ஆச்சே
(ஆடுவோமே)
சங்கு கொண்டே இதனை ஊதுவோமே-நம்
சமுதாயர்ம் அறிய எடுத்து ஓதுவோமே
இங்குக் காணும் அரிய காட்சியாமே-ஏக
இந்திய நாடே நல்ல சாட்சியாமே
(ஆடுவோமே)
ஏழையின் வாழ்விலே ஏற்ற மில்லை-சாதி
ஏற்றத் தாழ்விலே மாற்ற மில்லை
பேழையுள் உறங்கும் நோட்டுக் கட்டே-விலைப்
பேசியே வாங்கும் ஓட்டு சீட்டே
(ஆடுவோமே)
ஊற்றாக ஓடுதாம் ஊழல் இங்கே-அதை
ஒழிப்பதாய் சொல்வாரும் பெறுவார் பங்கே
மாற்றமே இல்லாது இன்றும் என்றும்-இதை
மாற்றிட வழிதானே இல்லை ஒன்றும்
(ஆடுவோமே)
புலவர் சா இராமாநுசம்