Wednesday, April 26, 2017

எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும் எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும்
எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்
பித்தரைப் போல பேசுவர்! பலரும்-ஏனோ
பின்னர் அதனை மாற்றுவர் சிலரும்
சித்தம் கலக்கும் செய்திகள் செப்பிட- சற்றும்
செயல்படா அரசுக்கு நிகரென ஒப்பிட
இத்தரை தன்னில் எதுவுமே  இல்லை-அந்தோ
இறைவா காக்க வந்திடு ஒல்லை!


புலவர் சா இராமாநுசம்

Saturday, April 22, 2017

கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்!கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்
கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்
பெற்றாரைத் தெய்வமெனப் வணங்க வேண்டும்
பிறர்நோக பேசாது இருத்தல் வேண்டும்
உற்றாரை அரவணைத்து வாழ்தல் வேண்டும்
ஊர்மெச்ச நல்லவராய் நடத்தல் வேண்டும்
அற்றாரின் அழிபசியைப் போக்க வேண்டும்
ஆணவத்தை அடியோடு நீக்க வேண்டும்


புலவர் சா இராமாநுசம்

Tuesday, April 18, 2017

காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம் கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்!காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம்
கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்
நாணாது பொய்சொல்லி திரிய வேண்டாம்
நயவஞ்ச காரரொடு தொடர்பே வேண்டாம்
வீணாக பொழுதெல்லாம் கழிக்க வேண்டாம்
வேலைவெட்டி இல்லாதார் நட்பே வேண்டாம்
பேணாது பொருள்தன்னை அழிக்க வேண்டாம்
பிறர்பொருளை கேட்காமல் தொடவே வேண்டாம்


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 16, 2017

மனிதா மனிதா ஏமனிதா-நாளை மரணம் வந்தே நெருங்குமுன்னே!மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்


பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
  
புலவர்  சா  இராமாநுசம்

Friday, April 14, 2017

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்

எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே

ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை

இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே

ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா

புலவர் சா இராமாநுசம்

Thursday, April 13, 2017

மீண்டும் தமிழ்மணம் பழையபடி-பட்டியல் முறையின்றி வரவே வருந்துகிறேன்!


மீண்டும் தமிழ்மணம் பழையபடி-பட்டியல்
       முறையின்றி வரவே  வருந்துகிறேன்
வேண்டி  கவிதை முன்பேநான்-கூறி
       விண்ணப்பம் செய்திட கண்டேதான்
திருந்திய  நிலையில்  வந்ததுவே-தூயத்
        தேனென  இனிமை  தந்ததுவே
வருந்தவே  ஆனது  பழைபடி-மீண்டும்
         வருமா பார்போம்  முறைப்படி!

புலவர்    இராமாநுசம்

Wednesday, April 12, 2017

கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன் கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
நிம்மதி ஏற்பட செய்வீரா?


பட்டப் பகலில் நடக்கிறதே-பெரும்
பணமே கொள்ளை! அடிக்கிறதே!
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறதே!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...