Showing posts with label இன்று ஆடி பிறப்பு உழவர் வாழ்வு அவலம் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label இன்று ஆடி பிறப்பு உழவர் வாழ்வு அவலம் கவிதை புனைவு. Show all posts

Thursday, July 17, 2014

ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
     தவறின் பஞ்சம் ஈண்டமே

                         புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...