Showing posts with label ஊழல் ஊழல் ஊழல் எங்கும் எதிலும் ஊழல். Show all posts
Showing posts with label ஊழல் ஊழல் ஊழல் எங்கும் எதிலும் ஊழல். Show all posts

Friday, October 26, 2012

ஊற்றாகிப் போயிற்றே ஊழல்தான் ஆயிற்றே காற்றாக எங்கெங்கும் காண்கிறதே




ஊற்றாகிப் போயிற்றே  ஊழல்தான் ஆயிற்றே
காற்றாக எங்கெங்கும் காண்கிறதே மாற்றாக
ஏதும் வழியின்றி ஏங்குகின்ற ஏழைக்கே
மோதும் துயர்தான் துணை

இன்னாரென் றில்லை! எவரென்றும் பேதமில்லை!
ஒன்னாராம்  என்பதில்லை! ஒன்றேதான் தன்னாலே
வாய்த்த வழியெல்லாம்  வாங்குவதே நோக்கமெனில்
காய்த்த மரத்திற்கே கல்லு

கணகிட்டே  காசுதனைக் கையூட்டாய்  கேட்டே
சுணக்கமின்றி செய்வதாக சொல்லி குணக்குன்றாய்
கூசாது வேடமிட்டே கூறுகின்றார் அந்தந்தோ
பாசாங்கே செய்வதவர் பண்பு

அஞ்சாமல் தேர்தலிலே அள்ளியள்ளி  செல்வத்தை
பஞ்சாக விட்டாரே பார்தோமே நெஞ்சார
எண்ணிப்பார்ப் பீரா எவர்மீதே தப்பென்றே
உண்ணினால் வந்திடுமே உண்மை

நோட்டுக்கே  வாக்குதனை நோகாமல் கொண்டவரும்
நாட்டுக்கே  வந்தாரே நாடாள !கேட்டுக்கே
ஏற்ற  வழிதன்னை ஏற்படுத்தித் தந்தோமே
மாற்றம் வருமா மதி

எந்தத் துறைதன்னில் இன்றில்லை ஊழலென்றே
வந்த நிலையுண்டா?வாய்ப்புண்டா! தந்தவரே
ஓங்கி ஒலிக்கின்றார் ஊழல் ஒழிகயெனும்
பாங்கேதான் இங்கே பகை



               புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...