எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்
கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றி கொடுத்த வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்
துச்சம் அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சம் இன்ற அனைவரும ஓட
மீனவர் வாழ்வில் மேன்மையும் நாட
புலவர் சாஇராமாநுசம்

