Showing posts with label கற்பனை கவிதை புனைவு. Show all posts
Showing posts with label கற்பனை கவிதை புனைவு. Show all posts

Friday, December 8, 2017

பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே!



தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொலையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவளோ
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முகத்தின்
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-எனது
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினமே
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவளும்
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் னுடை
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என்னின்
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே  கவிப்பெண்ணே-தீராப்
பழியும் வருமுன்  வாயின்னே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...