Showing posts with label கவிதை குவியும் குப்பை தொற்றுநோய். Show all posts
Showing posts with label கவிதை குவியும் குப்பை தொற்றுநோய். Show all posts

Friday, June 8, 2012

மாட்சிமை மிக்க மேயரய்யா!


ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னைக் காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையெனக் கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல்ல-இது
குத்தும் கவிதை ஆக்கமல்ல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
             புலவர் சா இராமாநுசம்

 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...