புத்தம் புதுமலரே பூங்கொத்தே உனைப்போன்றே
நித்தம் ஒருகவிதை நினைக்கின்றேன்! எழுதிவிட
சித்தம் கலங்கிவிட சிலநேரம் குழம்பிவிட
எத்தனை முயன்றாலும் இயலாது போகுமந்தோ!
அலைபோல ஓயாது அலைகின்ற உள்ளத்தில்,
விலைபோகாப் பொருளாகி வீணாகும்!பள்ளத்தில்
நிலைதவறி வீழ்கின்ற நிலைதானே! என்நிலையும்
வலையேற ஒருகவிதை வாரது போகுமந்தோ!
எடுத்த அடிதன்னை எப்படியோ முடித்தாலும்
அடுத்த அடிகாணா! அடிப்பட்டு போகுமனம்
தொடுத்த மாலையது துண்டுபல ஆனதுவே
விடுத்த விடுகதையாய் விடைகாணாப் போகுமந்தோ!
தேன்தேடும் வண்டெனவே திரிகின்ற என்மனமோ
தான்தேடி அலைந்தாலும் தவிப்பேதான் கண்டபலன்
மான்தேடி ஏமாந்த வேடனது நிலையேதான்
நான்தேடி அலைந்திடவும் நாட்கள்பல போகுமந்தோ!
கூடிக் கருமேகம் மின்னலிட்டும் இடிமுழக்கி
ஓடிக் கலைந்தனவே ஒருசொட்டும் பெய்யாமல்
வாடும் பயிர்பச்சை வானநோக்க, என்கவிதை
தேடும் மனவெளியில் திசையறியா போகுமந்தோ!
இலவே காத்தகிளி என்நிலையும் ஆனதய்யா!
உலவாத் தென்றலென உள்ளம்தான் போனதய்யா
நிலவே காணாத நீள்வானாய் நெஞ்சந்தான்!
பலவே நினைத்தேனோ பாழ்பட்டு போகுமந்தோ!
புலவர் சா இராமாநுசம்