செவிடன் தனக்கே சங்கும் எதற்கே-என
செப்பினார் அருணா தலைப்பும், அதற்கே!
கவிதைத் தருகெனக் கனிவுடன் கேட்டார்-தன்
கருத்தினை மறுமொழி தன்னிலே இட்டார்!
தம்பியின் விருப்பை தனயன் ஏற்றேன்-இங்கே
தந்திடும் வாய்ப்பை தானும் உற்றேன்!
நம்பியே சிலவரி நவின்றேன் நானும்-நீர்
நல்லதா கெட்டதா? விளக்கிட வேணும்!
மத்திய மாநில அரசுகள் இரண்டும்-ஏழை
மக்களை வாட்டி பலவழி சுரண்டும்!
எத்தனை சொல்லியும் ஏற்கவே மாட்டார்-தாம்
ஏற்றிய விலையில் மாற்றமே காட்டார்!
இத்தகைப் போக்கே செவிடன் சங்காம்-என
இயம்புதல் பொருத்தம் ஆமே! இங்காம்!
சித்தமே இரங்கா செவிபுலன் அடைப்பே-அவர்
சொல்லும் செயலும் ஊழலின் படைப்பே!
ஊற்றென ஊழல் ஓடுவ கண்டோம்-பலரும்
ஓங்கிட குரலும் ஒலித்திட விண்டோம்!
ஏற்றவர் இல்லை! எதிர்த்தால், தொல்லை!-மனம்
ஏங்கவும் தாங்கவும் பழகின ஒல்லை!
சாற்றுவ செவிடன் காதில் சங்காம்-மேலும்
சாற்றிடில் மக்கள் மறதிக்கும் பங்காம்!
மாற்றமே வருமா மாண்பினைத் தருமா-மக்கள்
மறந்தால் அதுவும் செவிடன் சங்காம்!
புலவர் சா இராமாநுசம்