இன்னுமா
வாழ்கிறது ஒருமைப் பாடே! –அதை
எண்ணியே
ஏமாந்து அடைந்தோம் கேடே!
மின்னுமா மின்னலென
வானம் நோக்க –கலையும்
மேகத்தால்
கண்ணிரண்டும் நீரைத் தேக்க
மன்னுமா வாழ்க்கையென
தேம்பு கின்றான் –துயர்
மண்டியதால்
வெதும்பிமனம் கூம்பு கின்றான்!
தன்னுயிரை விடுவதற்கும்
துணிந்து விட்டார்–கன்னடர்
தருவார்கள்
நீரென்றே நம்பிக் கெட்டார்!
வயலெல்லாம் வெடித்துவிடக்
காணும் காட்சி –உழவன்
வாய்விட்டு
அழுகின்றான் ! உண்டா ? மீட்சி!
பெயலின்றி போயிற்றே
பருவக் காலம் –எதிர்
பேயாக
விரட்டுமே வறுமைக் கோலம்!
தயவின்றி ஒருதலையாய்
மத்திய அரசே–வழக்கை
தள்ளிவைக்க
பயிர்கருகி ஆகும் தருசே!
பயனின்றி தமிழகமே வாளாய்க் காண –என்றும்
பழிக்குமே
எதிர்காலம் நாமும் நாண!
கொட்டிவிட்ட
நெல்லிக்காய் மூட்டை
ஆனோம் –ஒன்று
கூடிவிட வழியின்றி சிதறிப் போனோம்!
கட்டிவிட்ட வேலியது
கம்பிபோல இங்கே –மின்
கம்பங்கள் !காணுகின்றோம் சாரம் எங்கே ?
திட்டமில்லை நம்மிடையே
கூடிப் பேச –நல்
திறனிருந்தும் போட்டியிட்டு
வீணில் ஏச!
எட்டியென நம்வாழ்வு கசந்து போகும்
-வரும்
எதிர்கால
நிலையெண்ணில் உள்ளம் வேகும்!
நெய்வேலி மின்சாரம்
மட்டும் வேண்டும் -சொட்டு
நீர்கூட
இல்லையென மறுத்தார் மீண்டும்!
பொய்வேலி ஏகமெனல்
புரிந்து கொள்வோம் –மேலும்
பொறுமைக்கும் எல்லையுண்டு
பொங்கி எழுவோம்!
செய்வீரா
!? இனியேனும் ஒன்று படுவீர் -உடன்
சிந்தித்து செயல்பட
ஈகோ விடுவீர்
உய்வீராம்
அதன்பின்னே எண்ணிப் பாரீர்
-நம்
உரிமையைக் காத்திடத்
திரண்டு வாரீர்
புலவர் சா
இராமாநுசம்

