இளையமகள்
பெற்றெடுத்த பேரன் – கணினி
இணையத்தை
இயக்குவதில் சூரன்
வலைதனிலே
எனக்குதவி வருவான் –தமிழ்
வார்தைகளை திருத்திகூட தருவான்
அதிகாலை
எழுவதுதான் தொல்லை! -ஆனால்
அதன்பிறகு
தயக்கமது இல்லை
புதுமாலை போல்பொலிவு கொண்டே –பள்ளி
போய்விட்டு திரும்புவதும் உண்டே
படியென்று சொல்லுவது
வீணே! –அவன்
படித்திடுவான் பாடங்களைத் தானே
முடியென்று
சொல்லுமுன் முடிப்பான்! –செயலை
முடித்துவிட்டு பின்பேதான் படுப்பான்
கண்ணெனவே
காக்கின்றாள்! மகளே -அந்த
காரணத்தை
நானெடுத்தே புகல
ஒண்ணெனவே
பெற்றதாலே அருமை –அவன்
ஊர்மெச்ச
படிப்பதாலே பெருமை
உண்ணுவதில்
மட்டும்தான் தொல்லை –அதை
உணரும்நாள் வந்திடிமா ஒல்லை!
மண்டிவிடும்
மகிழ்வாலே மேலும் –இதை
மறவாது நடப்பானா நாளும்
தப்பென்றால்
தலைகுனிந்து நிற்பான் -செய்த
தப்புக்கு மன்னிப்பு கேட்பான்
முப்பாலய்
அவன்வாழ வேண்டும் –தம்
முன்னோரின் வழிபற்றி யாண்டும்!
புலவர் சா இராமாநுசம்


