சின்னஞ் சிறுக் குழவி
சிங்கார இளங் குழவி
கன்னம் குழி விழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முக மாகும்
அன்றலரும் தாமரை போல்
தன்னை மறந்த தவளும்
தாலாட்டு பாடு வளாம்
பூவின் இதழ் போல
பொக்கை வாய் விரிய
நாவின் சுவை அறிய
நறுந் தேனை தடவிட
பாவின் பண் போல
பைந்தமிழ் சுவை போல
காவின் எழில் போல
களிப்பாயே தேன் சுவையில்
கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ் கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்த நல் ஓவியமே
மண்ணை வள மாக்கும்
மழைத் துளியே நீயுறங்கு
கொஞ்சும் மழலைக் கோர்
குழல் இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னை மனம்
அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
நீவளரும் வரை யவளே
புலவர் சா இராமாநுசம்

