Showing posts with label கோகில்ராஜ் கொலை சாதிவெறி தொடரும் அவலம் துயரம் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label கோகில்ராஜ் கொலை சாதிவெறி தொடரும் அவலம் துயரம் கவிதை புனைவு. Show all posts

Friday, July 3, 2015

என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை!


தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரியும்
தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்
வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
மாண்டானே,கோகில்ராஜ் ! சாதி! வெறியில்-அந்தோ
மாறாதா!? இந்நிலையே! நீதி! நெறியில்!


ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே
நாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...