Showing posts with label சமூகம் வாழ்வியல் முறை மனித பிறப்பு சிறப்பு புனைவு கவிதை. Show all posts
Showing posts with label சமூகம் வாழ்வியல் முறை மனித பிறப்பு சிறப்பு புனைவு கவிதை. Show all posts

Thursday, January 28, 2016

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!



அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
தொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...