Showing posts with label சாதி வேற்றுமை களைதல் உயிர் பலி புனைவு. Show all posts
Showing posts with label சாதி வேற்றுமை களைதல் உயிர் பலி புனைவு. Show all posts

Monday, July 8, 2013

நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?





அணைந்துவிட்ட  சாதித்தீ  மீண்டும்  இன்றே –கொடிய
    ஆலகால விடமாக  மாற  நன்றே!
இணைந்துவிட்ட  காதலர்கள்  பிரிந்தோர்  ஆக –அந்தோ
    இளவரசன்  உயிர்மட்டும்  பறந்து  போக!
நனைந்துவிட  துயராலே பல்லோர் உள்ளம் – இன்றே
    நாடெங்கும்  பாயுதய்ய ! கண்ணீர் வெள்ளம்!
நினைந்திதனை  வருந்துமா ! பாழும் உலகம் –மேலும்
    நீளாது  திருந்துமா  மூளும்  கலகம்!

உண்மையிலே  சாதிதன்னை  ஒழிக்கும்  எண்ணம் –இங்கு
   உருவாக  வில்லையெனில், ! அழிக்கும்!  திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற  நிகழ்வு  எல்லாம்- அதற்கு
   ஆதார  மானதென காட்டும்  சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே  காரணம்  ஆகும் –சாதிப்
    புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே  போகும்!
வண்மைமிகு  சட்டத்தால்  பயனே  இல்லை! –நாளும்
    வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ  எல்லை!

ஓட்டுதனைக்  குறிவைத்தே  சாதி இங்கே – மனித
    உணர்வுகளை  தூண்டிவிடின் ஒழிதல்  எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற  பொம்ம  லாட்டம் –கட்சி
    அரசியலார் அனைவருமே கொள்ளும்  நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென  திட்டம்  போட்டே –அறியா
    ஏழைகளை  ஏமாற்றி  ஓட்டு  கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை  நடக்கும்  ஒன்றே- இதனை
    நம்புகின்ற  மக்கள்தான்  உணர்தல் என்றே!?

                           புலவர்  சா  இராமாநுசம்
    

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...