Showing posts with label சிங்களர். Show all posts
Showing posts with label சிங்களர். Show all posts

Tuesday, February 19, 2013

வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து வருந்தி எழுதினேன் நானிதனை




வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைசுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றி கண்துஞ்சல்
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

              புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...