போனாய் எங்கே தமிழ்மணமே-ஏங்கிப்
பார்த்திட மறையும் தமிழ்மணமே!
ஆனாய் என்ன அறியோமே-எங்கள்
ஆவலை அடக்க தெரியோமே
தேனாய் இனிக்க வருவாயே-பதிவை
தேடி எடுத்துத் தருவாயே!
மானெனப் பாய்ந்து போனதுஏன்-இந்த
மறையும் நிலைதான் ஆனதுஏன்?
எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
எதிரியை எதிர்த்து வெல்வாயா?
இங்கே பலரும் அலைகின்றார்-தினம்
ஏங்கி ஏங்கி குலைகின்றார்!
அங்கே தங்கி விடுவாயா-மனம்
அஞ்சுதே துயரம் படுவாயா?
பங்கே உன்னுடன் நாள்தோறும்-வைத்த
பதிவரின் துயரை உடன்பாரும்!
முன்னே ஒருமுறை இவ்வாறே-துயர்
மூண்டிடச் செய்தல் எவ்வாறே!
என்னே அருமை கண்மணியே-இது
ஏற்புடை செயலா தமிழ்மணியே!
பொன்னே என்றுனை காத்திடவும்-தினம்
போற்றி வரவை நோக்கிடவும்,
மின்னே போலத் விரைந்திடுவாய்-வலை
மேதினிக் காணத் தந்திடுவாய்!
புலவர் சா இராமாநுசம்

