எழுநூற்று ஐம்பது பதிவு தன்னை –நான்
எழுதிவிட்டேன் மகிழ்வாக வாழ்த்தும் என்னை-இன்று
தொழுகின்றேன் உறவுகளே உம்மை எல்லாம் –மேலும்
தொடர்வீரே! மறுமொழியாய் நாளும் பல்லாம்-ஏதும்
வழுவாக எச்செயலும் செய்தேன் இல்லை –நன்மை
வருமென்று மாற்றார்க்கும் தாரேன் தொல்லை-நொந்து
அழுவர்க்கும் உதவுகின்ற குணமும் கொண்டேன் –என்னை
அறிந்தார்கும் இதுதெரியும்! உண்மை! விண்டேன்!
எத்தனையோ கற்பனைகள் நெஞ்சில் எழுமே –முதுமை
எழுதிவிட தடைபோடும் உள்ளம் அழுமே-நானும்
புத்தனல்ல ஆசைகளை அடக்க இயலா –மனம்
போதிமரம் அல்லயிது! பொங்கும் புயலா?-நாளும்
சித்தமெனும் கடல்தன்னில் அடிக்கும் அலையா?-வானில்
சிறகடித்து பறக்கின்ற பறவை நிலையா?-அறியேனாக
(இவை)
அத்தனையும் தாண்டித்தான் எழுது கின்றேன் –உம்மோர்
அன்பாலே வலிமறந்து நாளும் வென்றேன்
புலவர் சா இராமாநுசம்