இதுவரையில் என்கவிதை மரபின் வழியே- நான்
எழுதியது அனைத்துமென் அன்னை மொழியே
புதுக்கவிதை எழுதிவிட முயன்று பார்த்தேன்-ஆனால்
புரியவில்லை! வரவில்லை! உள்ளம் வேர்த்தேன்!
எதுக்கவிதை என்பதல்ல எனது நோக்கம் –நானும்
எழுதிடவே எண்ணினேன் புதிய ஆக்கம்!
அதுவெனக்கு வரவில்லை! தோற்றுப் போனேன்-ஆனால்
ஆசைமட்டும் அடங்காத ஒருவன் ஆனேன்
இன்றில்லை! என்றாலும், வெற்றி பெறுவேன்! –மேலும்
இயன்றவரை முயன்றேதான் எழுதித் தருவேன்
நன்றில்லை எனச்சொல்லி தள்ள மாட்டீர் –என்ற
நம்பிக்கை எனக்குண்டே எள்ள மாட்டீர்
கன்றில்லை என்றாலும் பசுவின் பாலை –யாரும்
கறக்காமல் விடுவாரா! ? பயணச் சாலை
ஒன்றில்லை என்றாலும் முயலல் தானே –பணியில்
ஓய்வுற்ற எனவரையில் அறிவேன் நானே !
புதுக்கவிதை எழுதுவதும் புதுமை என்றே –எனக்குப்
புலப்படவும், புரிந்திடவும் உணர்ந்தேன் நன்றே
இதுக்கவிதை எனச்சொல்ல எழுத வேண்டும் –மேலும்
எழுதிவிட நாள்தோறும் நம்மைத் தூண்டும்
மதுக்கவிதை! படிப்போரின் மனதை மயக்கும் –என்றும்
மறவாது !நினைத்தாலே நெஞ்சம் வியக்கும்
எதுக்கவிதை என்றிங்கே ஆய்தல் வீணே –அதை
எழுதியதும் எவரெனவே ஆய்தல் வீணே!
புலவர் சா இராமாநுசம்