சூடும் சுரணையும் நமக்கில்லை –சேர்ந்து
சொல்லியும் மத்தியில் கேட்பதில்லை
வாடும் மீனவர் வாழ்வில்லை -நாளும்
வருந்தும் அவன்குரல் மாறவில்லை
கேடும் செய்தவன் நாட்டிற்கே –நாம்
கேட்டும் போவதாய் ஏட்டிற்கே
நாடும் அறிந்திட
சொல்கின்றார் – தெரு
நாயென நம்குரல் கொள்கின்றார்
உண்மை! தமிழா எண்ணிப்பார் –இந்த
உலகில் நமையார் மன்னிப்பார்
கண்ணை விற்று ஓவியமா – என்ற
கதைதான் மத்தியின் காவியமா
விண்ணை முட்டும் பெருமைதனை –அற
வழியில் தமிழன் அருமைதனை
திண்ணை விட்டு
எழுவாயா –வடக்கு
திசையை நோக்கியே தொழுவாயா!
பதவி ஆசைகள் போகட்டும் –ஆட்சி
பரம்பரை
சொத்தெனல் ஏகட்டும்
உதவி அல்லவே உரிமையென –அதை
உணர்ந்து செயல்படின் பெருமையென
நிதமே நடந்து
கொண்டாலே –வெற்றி
நிலைபெறும் உம்முடை தொண்டாலே
இதுவே ! இன்றே!
உள்ளவழி – எனில்
இழிவே ! என்றும் மாறாப்பழி!