மறவாது
எழுதுவேன்! மரபில் கவிதை –என்
மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்
விதையே!
இறவாது
வாழ்வது அதுதான் என்றே –பலர்
இயம்பிட, உள்ளத்தில் ஏற்றேன்
இன்றே!
தரமாக
தந்திட முயல்வேன் நானே –அன்னை
தமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத்
தேனே!
வரமாக வழங்கினீர் மறுமொழி
தம்மை – என்னை
வாழ்திட,,! வளர்ந்திட,! வணங்குவேன்
உம்மை!
உள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு
உருவாக, கருவாகி, கவிதை ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட நீர்போல்
தேங்கி–பின்னர்
பாய்கின்ற நிலைபோல நெஞ்சினில் தாங்கிக்,
கொள்ளத்தான் எழுதிட முயல்வேன் !மேலும் –அதில்
குறைகண்டே சொன்னாலும் திருத்தி,
நாளும்!
எள்ளத்தான் சொன்னாலும் வருந்த மாட்டேன் – மேலும்
எவர்மனமும் புண்பட கவிதைத்
தீட்டேன்!
தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை
தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!
இனிமைமிகு
உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்
இளமைபெற மறுமொழிகள் வாரித்
தந்தீர்!
பனிவிலக
வெம்மைதரும் கதிரோன் போன்றே –எனைப்
பற்றிநின்ற துயர்படலம் விலகித்
தோன்ற!
நனியெனவே
நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ்
நாள்முழுதும் வணங்கிடவே
என்னை வென்றீர்!
(மீள்பதிவு)

