வந்ததைய்யா வரவுசெலவு அறிக்கை ஒன்றே –ஏழை
வடித்திடவும் கண்ணீரை நாளும் நன்றே
தந்ததைய்யா ஐயகோ ! மத்திய ஆட்சி-நடுத்
தரமக்கள் அழுகையே இதற்குச் சாட்சி
ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டும்!-மேலும்
ஏற்றமெனில் !அவர்விழியில் இரத்தம் சொட்டும்
தீர்க்கவழி பாருமய்யா! வாழ விடுவீர்-என்ன
தொடர்கதையா?வேண்டாமே ! பின்னர் படுவீர்!
தேவைவரி மறுக்கவில்லை! இதுதான் முறையா?-மக்கள்
தினந்தோறும் பயன்படுத்தும் பொருளும் குறையா
சேவைவரி உயர்த்தியதும் முற்றும் சரியா –உடன்
சிந்திப்பீர்! இல்லையெனில் விலையே குறையா
புலவர் சா இராமாநுசம்

