Showing posts with label வளுவர் ஈகை அறம் செய்வன கவிதை புனைவு. Show all posts
Showing posts with label வளுவர் ஈகை அறம் செய்வன கவிதை புனைவு. Show all posts

Wednesday, July 10, 2013

ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா இன்பம் காணும் சுகவாழ்வே


சாதலே மிகவும் இன்னாது-என
சாற்றிய வள்ளுவன் மாற்றியதை
ஈதல் இயலா தென்றாலே-அதுவும்
இனிதெனச் சொல்லிப் போற்றியதை
காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
கண்ணிர் தன்னைத் துடைப்பீரா
ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா
இன்பம் காணும் சுகவாழ்வே

பெற்றான் பொருளைக் காப்பாக-அதனைப்
பேணிக் காக்கும் நோக்காக
அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
அறமென செல்வம் சேர்ப்பீரே
உற்றார் இல்லார் உறவில்லை-பசி
உற்றார் எவரோ? கணக்கில்லை
நற்றா யாக ஏற்றிடுவீர்-நாளும்
நற்பணி யாகவே ஆற்றிடுவீர்

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
ஈடில் ஒன்றென அறியாதான்
பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
பதுக்க பாவம்! மண்மூடி
காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
காணா தவன்கண் நீர்வற்ற
சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
சென்றதே இன்று கண்டபல

புலம்பி அழுதால் வந்திடுமா-போன
பொருளும் பாடம் தந்திடுமா
விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
தனக்கென வாழா உளம்பெற்றே
அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

-புலவர் சா. ராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...