Showing posts with label விலைவாசி உயர்வு மத்திய மாநில அரசுகள் தன்மை புனைவு. Show all posts
Showing posts with label விலைவாசி உயர்வு மத்திய மாநில அரசுகள் தன்மை புனைவு. Show all posts

Wednesday, June 12, 2013

அஞ்சாது நடக்காதீர்! ஆள்வோரே ஈண்டும் –உடன் ஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்!





வானத்தை  முட்டுவதா  விலைவாசி யிங்கே – வாங்க
   வழியில்லா மக்கள்தான் பரதேசி  யிங்கே!
ஏனென்று  கேட்காத  ஊடகங்க ளிங்கே - ஏதும்
   எல்லையின்றி  நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானின்று நடக்கின்ற  நாடுமது மிங்கே- மக்கள்
   தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவது தேளாகும்!  இங்கே –நாளும்
   திகைப்போடு கேட்கின்றார்  அரசுதான் எங்கே?


கால்கிலோ  காய்கூட  வாங்கிடவே இயலா –ஏழைக்
   கண்ணீரைத்   துடைத்திட யாருமே முயலா!
நாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு  காணா-சாகா
   நடைப்பிணமே! அவன்வாழ்வு! கண்டுமதை  நாணா!
ஆள்வோரே! கண்மூடி துயிலொன்று கொண்டால்? –ஆள
   ஆதரவு  தந்தார்க்கு  செய்கின்ற   தொண்டா?
மாள்வாரா  மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்
   மட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்!


நஞ்சாக ஏறிவிட  நாள்தோறும் அந்தோ –தெரு
  நாய்போல அலைகின்றார் உள்ளமதும்  நொந்தே!
பிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்
   பேசியே திரிகின்ற  பித்தனாய்ப் போனார்!
பஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்
    பாராளும் தேர்தலில்  மறந்துடு  வாரோ?
அஞ்சாது நடக்காதீர்!  ஆள்வோரே ஈண்டும் –உடன்
    ஆவனவும்  செய்தால்தான் வருவீராம்  மீண்டும்!

                                புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...