உண்ணுகின்ற உணவுதனை
தந்தோ னின்றே – நஞ்சு
உண்ணுகின்றான் சாவதற்கே
கொடுமை யன்றே!
எண்ணுதற்கே இயலாத
துயரந் தானே –அதை
எண்ணுகின்ற
அரசுகளும் இல்லை வீணே!
பாடுபட்டு இட்டபயிர்
கருகிப் போக – தீயும்
பற்றிவிட
வயிரெரிந்து உருகிச் சாக
மாடுவிட்டு மேய்க்கின்ற
காட்சி காண்பீர்– நல்
மனங்கொண்டார்
அனைவருமே கண்ணீர் பூண்பீர்!
இட்டபயிர் இட்டவனே
அழிக்கும் நிலையே –இன்று
இருக்கிறது
தமிழ்நாட்டின் வறட்சி நிலையே!
திட்டமில்லை தீர்பதற்கும்
முயற்சி இலையே – உழவன்
தேம்பியழின்
வைப்போமா
அடுப்பில் உலையே!
நிலத்தடி நீர்கூட
எடுக்க இயலா –சோக
நிலைதானே
மின்வெட்டும் பாழும் புயலாய்!
அலகிட்டு சொல்வதற்கும்
முடியா வகையே –மக்கள்
அன்றாட
வாழ்க்கையிலே தீராப் பகையே!
நெய்வேலி கல்பாக்கம்
இருந்தும் இங்கே –நாளும்
நிலையான
மின்வெட்டே !ஆனால் பங்கே !?
பொய்வேலி ஏகமெனல்
இந்திய நாடே –என்ற
போதனை
கேட்டதால் வந்தக் கேடே!
கத்தியும் கதறியும்
மக்கள் ஓய –கேளாக்
காதென
சங்கொலி சென்றுப் பாய,
சித்தமும் கலங்கியே
செய்வ தறியார் –கல்லில்
செதுக்கிய
சிலையென இருப்பர் உரியார்!
பஞ்சமும் பசியுமே
வாட்டும் போதே –இன்று
பதவிசுகம்
காண்பார்கள் உணர்வார் தீதே!
கொஞ்சமும் அக்கறை
எடுப்பார் இல்லை –பல
கட்சிகளும்
இருந்துபயன்!? ஒற்றுமை இல்லை!
நாதியற்றுப் போனாரே
உழைக்கும் மக்கள் –வாழும்
நம்பிக்கை
ஏதுமின்றி ஏழை மக்கள்
வீதிவலம்,
போராட்டம் நடத்து கின்றார் –இன்னும்
வேற்றுமையில் ஒற்றுமை
இதுவா ? என்றார்!
புலவர் சா இராமாநுசம்

