Showing posts with label வெய்யில் கொடுமை அனல் காற்று! கவிதை புனைவு. Show all posts
Showing posts with label வெய்யில் கொடுமை அனல் காற்று! கவிதை புனைவு. Show all posts

Sunday, April 24, 2016

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம் பாதம் பட்டால் சுடும் மண்ணில் !



கோடைக் காலம் வந்து துவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்த துவே !
ஆடை முழுதும் நனைந் திடவே -உடல்
ஆனதே குளித்த தாய் ஆகிடவே !
ஓடை போல நிலமெல் லாம்- காண
உருவம் பெற்று வெடித் தனவே !
வீ(ட்)டை விட்டே வெளி வரவே -மனம்
விரும்பா நிலையை அனல் தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே -அற
பசுமை முற்றும் நீங்கி டவே !
உச்சியில் வெய்யில் வந்த தெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்ட தனல் !
மூச்சை இழுத் தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயி லென -வெதும்பி
செப்பிட வார்தை செவி விழுமே !

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும் மண்ணில் !
எத்தனை வேகம் காட்டு கின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடு கின்றார் !
இத்தனை நாள் போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக் குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே !

வற்றிய நீர்நிலை இல் லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல் லாமே !
பற்றி எரிய முற்ற றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ் சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றி டவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசி யாலே !

புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு)

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...