Friday, May 24, 2013

பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின் பூமியில் புகழச் சொல்லேது!



காலம் ஓடும் நிற்காதே-வீண்
  காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
   நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
  அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
   கொள்கை அழகு! பேசலுக்கு

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
   தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
   பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
    கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
   எண்ணா செயல்தரும் துயரன்றோ

மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
   மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
   சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
   குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
   சிந்தனை தன்னில் ஆழ்வோமே

வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
   வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
    சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
   உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
   பூமியில் புகழச் சொல்லேது!

                   புலவர் சா இராமாநுசம்


Wednesday, May 22, 2013

உணர்வை அணுவேனும் கொண்டாயா?

கரைந்தே உண்டிடும்
காக்கையைப் போலவே
விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த
விவேகம் தனையேனும் எய்தாயா?

தன்னினம் காத்திட
தன்குரல் எழுப்புமே
உன்னினம் காத்திடச் செய்தாயா-பறவை
உணர்வை அணுவேனும் எய்தாயா?

கூட்டுள குஞ்சுக்கும்
கொத்திடும் அலகாலே
ஊட்டிடும் அன்பினைக் கற்றாயா-பறவை
உணர்வை அணுவேனும் பெற்றாயா?

கன்றதைக் காணாது
கத்திடும் தாய்பசு
ஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

வளர்த்திடும் நாய்கூட
வாலாட்டி நன்றியாம்
உளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

தட்டினால் மாடுகள்
தானாகப் பாதையில்
ஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

           புலவர் சா இராமாநுசம்

Monday, May 20, 2013

ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம் அறிந்து நடப்பின் இல்லைபழி



முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி

Thursday, May 16, 2013

பூண்டும் கருகிப் போனதுவே –எரியும் புகையில் நெருப்பென ஆனதுவே!





தாங்கிட  இயலா  கொடுமையிதே –காற்றும்
   தகித்திட  முடியா  அனலேயிதே!
தூங்கிட ஏதும் வழியில்லை-இரவும்
   தொடர்ந்து  வேர்வை தரும்தொல்லை!
ஓங்கிட நாளும் என்செய்வோம் –எப்படி
    உறக்க மின்றியே நாமுய்வோம்!
நீங்கிட வேண்டும் இந்நிலையே –உடன்
    நிம்மதி அதுவரை நமக்கிலையே!


வீதியில் நடப்பவர் பரிதாபம் –படும்
    வேதனைத்  தருமே கடுங்கோபம்!
பீதியால் நிழலைத் தேடுகின்றார் –காணின்
    பிழைத்திட  அங்கே  ஓடுகின்றார்!
காதில் புகுவதும் வெங்காற்றே-உச்சிக்
   கதிரவன  வெம்மையால் உடன்மாற்றே!
நீதியில்  செயலிதாம் மாற்றிடவாய்
    நிம்மதி பெற்றிட  ஆற்றிடுவாய்!

ஆண்டுக்கு ஆண்டு  இவ்வாறே –அனலை
   அள்ளித்  தந்தால்  எவ்வாறே!?
ஈண்டே நாங்கள்  வாழ்ந்திடவா –இல்லை
    இன்னல் பட்டே  மாயந்திடவா!
பூண்டும்  கருகிப்  போனதுவே –எரியும்
    புகையில் நெருப்பென  ஆனதுவே!
வேண்டுவன் தினமும்  கதிரோனே-இவ்
    வேதனை  தாங்காயிம் முதியோனே!

             புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 14, 2013

அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு நினைவஞ்சலி!



அன்னையர் தினத்தில், என் அன்னைக்கு
நினைவஞ்சலி
----------------------------

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கநீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

வருகையும் , நன்றி அறிவிப்பும் !


அன்பின் இனிய  உறவுகளே!
                காலை வணக்கம்!

                 முன்னரே, நான் குறிப்பிட்ட வாறு என்னுடைய  மலேசிய  சுற்றுப்  பயணத்தில் இலங்காவி, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய  இடங்களைப்  பார்த்து விட்டு திரும்பி நேற்று இரவு சென்னை நலமுடன் வந்து  சேர்ந்தேன்.
                      என்னை வாழ்த்தி அனுப்பிய உங்களது அன்பும், ஆதரவுமே
என்  பயணத்தை எவ்வித  இடையூறுமின்றி நடை பெற துணை நின்றது
என்பதை  மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி யினை காணிக்கை  ஆக்குகிறேன்

            பயண குறிப்புகளை  பின்னர்  எழுதுகிறேன்.

                                        புலவர் சா  இராமாநுசம்

Friday, May 3, 2013

இதயம் கனிந்த நல்லோரே—என் இதயத்தில் வாழும் பல்லோரே!



இதயம் கனிந்த நல்லோரே—என்
   இதயத்தில் வாழும் பல்லோரே!
நிதமும்  எழுத  நினைக்கின்றேன்-முதுமை
     இயலா  நிலையால் தவிக்கின்றேன்

இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
   இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
   தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!

சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
   சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை  தவழட்டும்!-மக்கள்
   நிம்மதி யாக வாழட்டும்!

பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
   பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
   கேவல மான இதனாலே!

உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
   ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
   ஏதும் அறியாக் கோழைகளே!

ஊரில் இல்லை வரும்வாரம்-எனவே
   உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
   வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!

                         புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...