Saturday, September 27, 2014

ஆயிரம் ஆயிரம் பக்தர்தினம் ஆடிப் பாடி வருகின்றார்!



புரட்டாசி-இரண்டாம் சனிக்கிழமை

ஆதவன் எழுவான் அதிகாலை
ஆயர் பாடியில் அதுவேளை
மாதவன் குழலை ஊதிடுவான்!
மாடுகள் அனைத்தும் கூடிடவே
ஒன்றாய்க் கூடிய ஆவினங்கள்
ஊதிய குழலின் இசைகேட்டு
நன்றாய் மயங்கி நின்றனவே
நடந்து மெதுவாய்ச் சென்றனவே!


ஆயர் பாடியில் மங்கையரும்
ஆடவர் பிள்ளைகள் அனைவருமே!
மாயவன் இசையில் மயங்கினரே
மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
சேயவன் செய்தக் குறும்புகளே
செப்பிட இனிக்கும் கரும்புகளே!
தூயவன் திருமலை வேங்கடவா
திருவடி தலைமேல் தாங்கிடவா !

ஆயிரம் ஆயிரம் பக்தர்தினம்
ஆடிப் பாடி வருகின்றார்!
பாயிரம் பலபல பாடுகின்றார்
பரமா நின்னருள் தேடுகின்றார்!
கோயிலைச் சுற்றி வருகின்றார்
கோபுர தரிசனம் பெறுகின்றார்!
வாயிலில் உள்ளே நுழைகின்றார்
வரிசையில் நின்றிட விழைகின்றார்!

எண்ணில் மக்கள் நாள்தோறும்
ஏழாம் மலைகள் படியேறும்
கண்ணுக் கெட்டிய தூரம்வரை
கண்ணன் புகழேப் போற்றுமுரை
பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
பஜகோ விந்தமே செய்கின்றார்!
விண்ணொடு மண்ணை அளந்தவனே
வேங்கட உன்னடித் தொழுகின்றேன்

புலவர் சா இராமாநுசம்
(மீள்பதிவு)

Thursday, September 25, 2014

கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!



மின்சார சுடுகாடு இனிமே வேண்டா-வீடே
மின்னின்றி சுடுகாடாம் ஆமே ஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணை முட்ட-மற்ற
பொருள்களின் விலையேற்றம் கண்ணீர் சொட்ட
என்செய்வர் மக்களுமே அம்மா யம்மா -மேலும்
அடிமேலே அடியா சும்மா சும்மா!
மின்சாரக் கட்டணத்தை குறைப்பீ ரம்மா-அடிக்கடி
மின்கட்டே வாட்டுவது, போது மம்மா!


நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-இன்று
நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றே
வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர் நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாரு மம்மா-அந்த
பாவிகளின் துயரத்தைத் தீரு மம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்!

பணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே
ஏழைக்கோ ! இலவசம்! தொல்லை யில்லார்
கணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதா புலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றா ரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே!

வெந்துவிட்ட புண்ணிலே வேலும் பாயா-மேலும்
வேண்டுமா?முதல்வரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர் நீரே-அந்த
நோக்காடே தீரவில்லை! இதுவும் வேறே
 வந்துவிட்டால் துயர்நீங்க வழியே யில்லை!-எதிர்
வரலாற்றில் என்றென்றும் பழியே யெல்லை!
கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக்
கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 23, 2014

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை!



வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே
வாராக் காரணம் தெரியவில்லை-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே –அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!


நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல-முகநூல்
சென்றது அணுவும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! எழுதுதல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

Monday, September 22, 2014

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும் எதற்குத் தொடங்கினேன் முகநூலே!



ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும்
எதற்குத் தொடங்கினேன் முகநூலே!
தானேப் புயலென வாட்டிடவும் –துன்பம்
தந்துமே நெஞ்சை ஆட்டிடவும்!
நானேன் தவிக்க ஆனதுவே –கொல்லும்
நஞ்சென நினைவுகள் போனதுவே!
தேனே என்றது அக்காலம் –முதுமை
தீயெனச் சுட்டிட இக்காலம்!


ஆடிய கால்கள் ஓய்வதில்லை –தமிழ்
அன்னையின் அருளோ தேய்வதில்லை!
பாடிய வாயும் மூடாதாம் –பொங்கிப்
பரவும் நினைவுகள் வாடாதாம்!
கூடிய வரையில் எழுதிடுவேன் –மரபே,
கொள்கையாக் கொண்டே தொழுதிடுவேன்!
வாடியப் பயிருக்கு வான்மழையே-நீங்கள்
வழங்கிடும் மறுமொழி தான்மழையே!

புலவர் சா இராமாநுசம்

Saturday, September 20, 2014

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி!


உறவுகளே!
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி! என்
துணைவியின் வேண்டுகோளுக்கிணங்க அன்று பாடியது!

சூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்
ஏழுமலை யானே எனையாளும் பெருமாளே
வாழும் நாளெல்லாம் உனைவணங்கி நான்வாழ
பாழும் மனந்தன்னை பதப்படுத்த வேண்டுகிறேன்


அன்னை அலர்மேலு அகிலாண்ட நாயகியே
பொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல
உன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்
என்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ

பஞ்சுப் பொதிபோல பரவி வருகின்ற
மஞ்சு தவழ்ஏழு மலையானே கோவிந்தா
தஞ்சம் நீயென்றே தலைவணங்கும் என்போன்றார்
நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்க வேண்டுகிறேன்

வாழிவாழி யென வானோர்கள் கூத்தாட
ஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்
தாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்
தோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே

தத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென
நித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று
சித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா
சத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா

வெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு
தன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட
மண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு
விண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்

மலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி
தலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே
அலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென
இலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்

ஆதிமூல மென்ற அபயக்குரல் வந்துன்
காதில் விழச்சென்று காத்தவனே கோவிந்தா
வீதிதனில் வருவாய் வீழ்ந்து வணங்கிடுவார்
தீதுதனை முற்றும் தீர்த்திடுவாய் கோவிந்தா

எங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்
பொங்கும் உணர்வெல்லாம் போற்றும் திருநாமம்
தங்கும் மனதினிலே தடையின்றி உன்நாமம்
பங்கம் அடையாமல் பாஞ்சாலி காத்ததன்றோ

அம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்
தம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்
இம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்
உம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே

பாடி முடித்திவிட பரந்தாமா உன்அருளை
நாடி வருகின்றேன் நாயகனே வேங்கடவ
தேடி வருவார்கு திருமலையில் உனைக்காண
கோடிக் கண்வேண்டும் கொடுப்பாயா பரந்தாமா

முற்றும் உன்புகழை முறையாக நான்பாட
கற்றும் பல்லாண்டு காணாது தவிக்கின்றேன்
பற்றும் அற்றவரும் படைக்கின்ற பிரம்மாவும்
சற்றும் அறியாருன் திருவடியும் திருமுடியும்

வேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்
நாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்
பேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்
சோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்

தாங்கும் நிலையில்லா தடைபலவே வந்தாலும்
நீங்கும் படிசெய்யும் நிமலனே நாள்தோறும்
தூங்கும் முன்வணங்கி தூங்கி எழவணங்கும்
வேங்கி தாசன்நான் விடுக்கின்ற விண்ணப்பம்

செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
அல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்

புலவர் சா இராமாநுசம்

Friday, September 19, 2014

இந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேடே!



உறவுகளே! இந்தித் திணிப்பு! எதிர்ப்பு! திரும்பப் பெறுதல்! செய்தி!இன்று!
எனக்குப் பழைய நினைவுகள்!

அன்று, நான் எழுதியது, இதோ !
அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய
திராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை! இது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது
எழுதியது! ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்!


இந்தியா என்பதோர் நாடே-என்ற
எண்ணத்தில் வந்ததிக் கேடே
நந்தமிழ் எழில்மிகு வீடே-இந்தி
நலம்தரா மாகள்ளிக் காடே
வந்தது இன்றெனில் ஓடே-இந்தி
வருகின்ற வழியெலாம் மூடே
பந்தென அதையெண்ணி ஆடே-இந்தி
பறந்திட வடக்கினைச் சாடே!


பள்ளியில் கட்டாயம் வேண்டும்-என்ற
பல்லவி கேட்குது மீண்டும்
துள்ளி எழுந்துமே ஈண்டும்-இந்தி
தொலைந்திட செய்வோமே யாண்டும்
கொள்ளியை எடுத்தெவர் உலையில்-அதை
கொண்டுமே வைப்பாரா தலையில்
எள்ளியே நகைக்காதோ நாடே-இந்தி
ஏற்பது தமிழுக்குக் கேடே!

தாண்டவ மாடுது இந்தி-அஞ்சல்
தலைகளில் சொகுசாகக் குந்தி
வேண்டாதப் பொதுமொழி இந்தி-அதை
விரட்டுவோம் அனைவரும் முந்தி
ஈண்டெவர் மரித்திட வரினும்-அதை
எத்தனை வகைகளில் தரினும்
மாண்டவர் பிழைத்திடப் போமோ-இந்தி
மறுமுறை நூழைந்திட ஆமோ!?

புலவர் சா இராமாநுசம்

Thursday, September 18, 2014

கத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்



கத்தும் கடலலையாய்- ஓயா
கரைமோதும் சிற்றலையாய்
தத்தும் குழந்தையென- வானில்
தவழ்கின்ற மேகமென
நித்தம் ஒருகவிதை-என்றும்
நிலையாக எழுதிவிட
சித்தம் இருந்தாலும் –முதுமை
செயல்படுத்த விடவில்லை


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...