Saturday, August 1, 2015

மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை மேலும் தொடராது ஓய ஈண்டும்!


காந்திய வாதியாய் மதுவை நீக்க-வாழ்ந்த
காலமெலாம் போராடி உயிரைப் போக்க!
வாந்தியாய் இரத்தமே சிந்தி விட்டார்-செய்தி
வந்திட நல்லோரும் கண்ணீர் விட்டார்!
சாந்தமே உருவான சசிபெருமாள் இன்றே-மறவா
சரித்திர நாயகன் ஆனார் நன்றே!
ஏந்திய கொள்கையில் மாற்ற மில்லை- அதில்
எள்ளவும் தன்னலம் என்றும் இல்லை!


எத்தனை முறையோ உண்ணா விரதம்-அவர்
இருந்துமே பயனின்றி போன விதம்!
இத்தகை முடிவிக்கே அவரும் வந்தார்-அந்தோ
இன்னுயிர் தன்னையும் பலியாய் தந்தார்!
சித்தமே கலங்கிட துயரம் பொங்கும்-உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இங்கும்!
மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை
மேலும் தொடராது ஓய ஈண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 30, 2015

உலகம் போற்றும் மாமேதை –இன்றவர் உடலை அடக்கம் செய்கின்றார்!


உலகம் போற்றும் மாமேதை –இன்றவர்
உடலை அடக்கம் செய்கின்றார்!
திலகம் இந்திய நாட்டுக்கவர் –மக்கள்
தேம்பியே கண்ணீர் பெய்கின்றர்!
கலமாம் அப்துல் பெயரென்றும்-காலக்
கல்லில் பொறித்த நிலைநின்றும்!
வலமாய் வருவார் உலகெங்கும்-அவரால்
வளர்ந்த அறிவியல் வளம்பொங்கும்!


தோல்விக்குத் தோல்வி தந்துடுவீர்-எந்த
துறையிலும் வென்றே வந்திடுவீர்!
பால்நிற மனமே கொண்டவராம் –காலாம்
பாரத இரத்தினா விண்டவராம்!
ஆலெனப் விரிந்திட அறிவியலை-நாட்டில்
அணுவினை ஆய்ந்து பொறியியலை!
நூல்பல கற்றே உரைத்தாரே-மதிமிகு
நுட்பத்தில் அக்கினி படைத்தாரே!

மாணவ ரோடு மாணவராய்—நாளும்
மகிழ்வாய் கலந்து தானவராய்!
காணவே வாழ்ந்தார் இறுதிவரை-பாவி
காலனால் முடிந்தது! இறுதியுரை!
பதவிக்கிப் பெருமை இவராலே—மனிதப்
பண்புக்கு பெருமை இவராலே!
உதவிக்கு அழைத்ததோ விண்ணுலகே-வாழும்
உத்தம மறவா மண்ணுலகே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 28, 2015

இந்திய நாட்டின் தலைமகன் ஆனார் சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!



அந்தோ மறைந்தார் அப்துல் கலாமே
நொந்தார் அனைவரும் நோகார் இலமே!
இந்திய நாட்டின் தலைமகன் ஆனார்
சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!

கனவும் மெய்படக் காணாது ஏக
நினவாய் என்றும் நிலையென ஆக!
மனமெனும் திரையில் மறையா ஓவியம்
இனமது தமிழரின் இதய காவியம்!

வாழ்கநீர் கால வரலாற்றில் ஒன்றென
சூழ்கவே உம்புகழ் சுடர்தரும் கதிரென!
ஆழ்கஉம் அறிவியல் அலைமிகு கடலென
மூழ்கிடாக் கலமே அப்துல் கலாமே!

புலவர் சா இராமாநுசம்

Monday, July 27, 2015

சின்னப் பையன் வருவானே-தினமும் செய்தித் தாளும் தருவானே!



சின்னப் பையன் வருவானே-தினமும்
செய்தித் தாளும் தருவானே!
சன்னல் வழியும் எறிவானே –கதவு
சாத்திட குரலும் தருவானே!
இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
பாடம் படிக்கும் வயதன்றோ!?
துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
துரத்த ஓடும் வயதன்றோ!
அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
அறுத்த செருப்புக் காலோடும்!
தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
தவறின் திட்டும் பெறுவானே!

சட்டம் போட்டும் பயன்தருமா-கல்வி,
சமச்சீர் ஆகும் நிலைவருமா?
இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
திட்டம் மட்டுமே போடுகின்றார்-அவர்தம்
தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
கொடிகட்டிப் பறக்குது! நாதியிலே!

இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
இருந்திட வேண்டும் ஒரேமுறை
நம்மைஆள தேர்தல்முறை-இன்று
நடைமுறைப் படுத்தும் அந்தமுறை
அமையக் குரலும் தொடுப்பீரே-கல்வி
ஆணையம் அமைத்து கொடுப்பீரே
சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்

புலவர் சா இராமாநுசம்

Saturday, July 25, 2015

நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி, நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!



நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி,
நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!
கோடான கோடிபணம் வீண்செலவு ஆக –அந்த
கொடுமையே இன்றிங்கே தொடராகிப் போக!
ஓடாகி ஏழைகளே தருகின்ற வரியும்- நாளும்
உதவாது பாழானால் வயிறன்றோ எரியும்!
வாடாது வசதியாய் வாழ்கின்ற இவர்கள்—மக்கள்
வாழ்வோடு விளையாடும் குட்டிச் சுவர்கள் !


கூடியே கலைதற்கா கொடுத்தாராம் ஓட்டே –உள்ளம்
குமுறித்தான் அழுகின்றார் மக்களும் கேட்டே!
தேடியே வந்தீர்கள் தெருவெங்கும் அன்றே –ஏனோ
தினந்தோறும் அவைதன்னில் சண்டையா நன்றே!
நாடியே நல்லதைச் செய்திட வேண்டும் –மேலும்
நாடளும் மன்றத்தை நடத்திட ஈண்டும்!
( மாண்பு மிகு பிரதமர்)
மோடியே முன்னின்று முயன்றிடல் நன்றாம் –நாடு
முன்னேற செய்வதில் முக்கிய ஒன்றாம்!
நடக்குமா???

புலவர் சா இராமாநுசம்

Friday, July 24, 2015

குடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட!



குடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை
கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட!
இடியாக ஒருசெய்தி ஏடுகளில் வருதே-மக்கள்
இதயத்தில் தாங்காத துயரத்தைத் தருதே!
விடியாத இரவாக இச்செயலும் போமோ -அரசு
விரைவாக செயல்பட்டு தடுக்காமல் ஆமோ!
கடிவாளம் இல்லாத குதிரையென திரியும்- அடங்கா
கயவர்களை தண்டித்தால் மற்றவர்க்குப் புரியும்!


இருக்கின்ற ஏரிகளும் இவ்வாறு ஆனால்-நாளை
எதிர்காலம் என்னாகும் எண்ணாது போனால்!
வெறுக்கின்ற நிலைதானே முடிவாக ஆகும்-பெற்ற
வேதனையில் எல்லாமே தலைகீழாய்ப் போகும்!
பொறுக்கின்றார் மக்களெனல்! தவறான எண்ணம் !-பாடம்,
போதிப்பர்! ஒன்றாகி! மறவாதீர் திண்ணம்!
சறுக்காது துணிவோடு செயல்படவே வேண்டும்-நல்ல
சந்தர்பம் இதுவாகும் வந்திடவே மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 22, 2015

வருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே வகித்திடுமாம் மதுவிலக்கு அதனை இங்கே!


வருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே
வகித்திடுமாம் மதுவிலக்கு அதனை இங்கே!
தருகின்ற கட்சிக்கே எங்கள் ஓட்டே
தருவோமென ஒன்றாகி மக்கள் கேட்டே!
பெறுகின்ற நிலைதன்னை செய்ய இன்றே
பெரும்பான்மை அவருக்கே தருதல் என்றே!
நெறிநின்றே ஓரணியாய் பாடு படுவோம்
நீங்காது இல்லையெனில் நாமே கெடுவோம்!


நல்லதொரு வாய்ப்பிதனை நழுவ விட்டால்
நாடெங்கும் மதுக்கடையே கண்ணில் பட்டால்!
அல்லதொரு வாழ்க்கைதான்! துன்பம் சூழும்
அழுகின்ற குடும்பங்கள் எவ்வண் வாழும்!
வல்லதொரு ஆயுதமே இந்தத் தேர்தல்
வாக்குரிமை பெற்றவர்கள உணர்த்து ஓர்தல்!
இல்லையெனில் எதிர்காலம் இருண்டே போகும்
இளையோரும் போதையிலே அழிதல் ஆகும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...