Showing posts with label குப்பை அகற்ற விண்ணப்பம். Show all posts
Showing posts with label குப்பை அகற்ற விண்ணப்பம். Show all posts

Tuesday, November 12, 2013

எங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா!



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...