Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, November 4, 2013

என் முகநூல் பதிவுகள்






கொண்டாட மனமில்லை -நம்
குலமகளாம் இசைப்பிரியா
துண்டாலே உடல்மூடி -சிங்கள
துரோகிகளும் இழுத்துவர
கண்டேனே! கண்டபின்பா! -மனம்
களித்திடுமா தீபாவளி!
சண்டாளன் ஆட்சியங்கே -குலைந்து
சாயும்நாள் ! தீபாவளி !


அரசாங்கம் போடும் திட்டமெல்லாம் நடைமுறைப் படுத்தும் போது முடிவில் , மணமக்கள் மீது போடப்படும் அட்சதைப் போல ஆகிவிடுகிறது! எப்படியென்றால், விழாவுக்கு வந்தவர்கள் தம் கையில் தரப் பட்ட அட்சதையை இருந்த இடத்திலிருந்தே போடுவதால் அவர்களுக்கு முன்னால் இருப்பவர் தலைமேல் தான் விழுமே தவிர மேடையை அடைவதில்லை! மேடையில் உள்ளவர் போடுவது மட்டுமே விழும்! அதுபோல , அரசு போடும் திட்டங்கள் , பல துறைகள், பல அதிகரிகள் என அவர்தம் கைகளில் சிக்கி பலனோ, பணமோ, சிதைந்து , சுருங்கி
மக்களை அடைகிறது! அதனால் திட்டத்தின் முழுபலன் கிடைப்பதில்லை! -சொன்னவர், நேரு, சொன்ன இடம் , மக்களவை!


ஆலயம் முழுவதும் மிகவும் ஒளிமயமாக இருந்தாலும் உள்ளே சென்று , கருவறையில் ஆண்டவன் முன்னால்
ஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்து விளக்கின் சுடரைக், காணும் போது தான் நமக்குப் பக்திப் பரவசம் உண்டாகிறது

மனிதப் பிறவியில் எந்தவொரு மனிதனுக்கும் ஒழுக்கம் தான் வாழ்க்கையில் மேலான சிறப்பைத் தருவதாகும் அதனால் தானே வள்ளுவர் பெருமானும் , போனால் திரும்பி
வராத உயிரைவிட ஒழக்கம் தான் விழுப்பம்(சிறப்பு) தருமென்றார்!

அன்று ,! அண்ணா, மக்களவையில் பேசும் போது ,பிரதமர் நேருவைப் பார்த்து , ஐயா !நீங்கள் கட்டி முடிக்கப் பட்ட கோபுரம், நான் கொட்டிக்கிடக்கின்ற செங்கல் ! என்று கூறியது எவ்வளவு பெரிய, நயமான, அரசியல் நாகரீகம்!

ஆனால், இன்று !? இப்படி! காணமுடிகிறதா!!!


                                                                                               புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 6, 2013

சொல்லில் இன்றைய மனிதநிலை!

போதுமென்ற மனங் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

உங்கள் ஆதரவை டுவிட்டரிலும் தொடர வேண்டுகிறேன்.

வணக்கம் தோழர்களே.. வலைப்பதிவு,முகநூலைத் தொடர்ந்து டுவிட்டரிலும் எழுத ஆரம்பித்துள்ளேன்.உங்கள் ஆதரவை டுவிட்டரிலும் தொடர வேண்டுகிறேன்.

                                புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 9, 2013

வேண்டியதும், வேண்டாததும்




முடிந்தவரைப்  பிறருக்கு  உதவ  வேண்டும் அவை
     முடியவில்லை  என்றாலும்  தளர  வேண்டாம்
விடிவுவரும் வரைநமக்கு  பொறுமை  வேண்டும் இரவு
     விடியாமல்  போவதுண்டா  கலங்க வேண்டாம்
கடிதுவரும்  என்றெண்ணி  இருத்தல்  வேண்டும் சற்று
      காலமது  ஆனாலும்  கவலை    வேண்டாம்
கொடிதுயெனில்  எதையுமே  தவிர்த்தல்   வேண்டும் சிறு
     குற்றமெனில்  அதைப்பெரிதுப்  படுத்தல்  வேண்டாம்

எண்ணியெண்ணி  எச்செயலும்   செய்தல்  வேண்டும் நாம்
     எண்ணியபின்  தொடங்கியதை  விடுதல்   வேண்டாம்
கண்ணியமாய்  என்றுமே  வாழ்தல்  வேண்டும் வரும்
      களங்கமெனில்  அப்பணியைச்  செய்தல் வேண்டாம்
புண்ணியவான்  என்றும்மைப்  போற்ற  வேண்டும் பிறர்
     புண்படவே  சொல்லெதுவும்  புகல  வேண்டாம்
மண்ணுலகில்  அனைவரையும்  மதித்தல்  வேண்டும் குணம்
    மாறுபட்டார்  தம்முடைய  தொடர்பே   வேண்டாம்

சட்டத்தை  மதித்தேதான்  நடத்தல்  வேண்டும் பெரும்
      சந்தர்ப  வாதியாக  நடத்தல்  வேண்டாம்
திட்டமிட்டே  செலவுதனை  செய்தல்  வேண்டும் ஏதும்
     தேவையின்றி  பொருள்தன்னை  வாங்கல்  வேண்டாம்
இட்டமுடன்  ஏற்றபணி  ஆற்ற  வேண்டும் மனம்
     இல்லையெனில்  மேலுமதைத்   தொடர  வேண்டாம்
கட்டம்வரும்  வாழ்கையிலே  தாங்க  வேண்டும் உரிய
       கடமைகளை   ஆற்றுதற்கு   தயங்க  வேண்டாம்

முன்னோரின்   மூதுரையை  ஏற்க  வேண்டும் வாழும்
     முறைதவறி  வாழ்வோரின்  தொடர்பே  வேண்டாம்
பின்னோரும்  வாழும்வழி  செய்தல்  வேண்டும் பழியைப்
      பிறர்மீது  திணிக்கின்ற  மனமே  வேண்டாம்
இன்னாரும்  இனியாராய்க் கருதல்  வேண்டும் பெருள்
     இல்லாரை  எளியராய்  எள்ளல்  வேண்டாம்
தன்னார்வத்  தொண்டரெனும்  பணிவு  வேண்டும் எதிலும்
      தன்னலமே  பெரிதென்று  எண்ணல்  வேண்டாம்

                                புலவர் சா  இராமாநுசம்

இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கியுள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கொள்ள விரும்புவோர் தொடரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்    

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...