Friday, May 2, 2014

யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!


யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி
இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!
நேர்செய்ய இயலாத இழப்பாம் அன்றோ- உயிர்
நீங்கிட , கயவர்களே இதுதான் நன்றோ!

வடிகின்ற கண்ணீரோ இரத்தம் ஆக –எப்படி
வாழ்வாராம் பெற்றோரும் துயரம் போக!
வெடிகுண்டு வைத்ததே! கயவர் கூட்டம்-மத
வெறியர்களே ஓயாதா உமது ஆட்டம்!

செடியொன்று மலராமல் கருக லாமா– அந்தோ!
செய்தாரே! இதுமேலும் தொடர லாமா!
மடியின்றி விரைவாக செயல்பட வேண்டும்-மக்கள்
மனதினில் பயமின்றி வாழந்திட ஈண்டும்!

நாள்தோறும் கொலைகொள்ளை! போதாது என்றா-தலை
நகரத்தில் வெடித்தது! வெடிகுண்டு நன்றா!
தேள்போல கொட்டுதே! நெஞ்சத்தில் துயரே-போனால்
திரும்பாத ஒன்றலாவா! வாழ்கின்ற உயிரே!

தூங்காமை துணிவுடமை இரண்டும் இன்றே- அரசு
தொய்வின்றி செயலாற்ற வேண்டும் ஒன்றே!
நீங்காமை வேண்டுமென அய்யன் சொன்னார்-நீதி
நிலைத்திட செய்வீரா!? அடங்க ஒன்னார்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, May 1, 2014

மேதினி போற்றிடும் மேதினமே –உன் மேன்மைக்கே இணைகாணா எம்மனமே!





மேதினி போற்றிடும்  மேதினமே –உன்
  மேன்மைக்கே இணைகாணா  எம்மனமே!
நீதியில்  முதலாளி  ஆட்டமெல்லாம்-என்றும்
   நீங்கிட  வைத்தாயே திட்டமெல்லாம்
வீதியில்  வருகின்றார்  ஆடிப்பாடி –பெற்ற
  விடுதலை ஓங்கிட  உரிமைநாடி
பீதியில் வாழ்வென்றே  வாழுகின்றார்- ஏதும்
   பேதமில்  ஒன்றென  சூழுகின்றார்

உழைப்பவர்  அனைவரும்  ஒற்றுமையாய் –இந்த
   உலகினில்  உரிமையே  பெற்றவராய்
தழைப்பது  உன்னாலே  மேதினமே –சொல்ல
   தன்னிகர் இல்லாத  இத்தினமே
பிழைப்பது எவ்வழி  அறியாமலே – எதிர்த்து,
    பேசிட துணிவும்  தெரியாமலே
அழைப்பது ஆண்டான் அடிமையென –இருந்த
   ஆணவம் நீக்கினாய்  கொடுமையென

புலவர்  சா  இராமாநுசம்
  

Tuesday, April 29, 2014

உள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு உருவாக, கருவாகி, கவிதை ஆமே!



மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதை –என்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றே –பலர்
     இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானே –அன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கினீர்  மறுமொழி  தம்மை – என்னை
     வாழ்திட,,! வளர்ந்திட,! வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ணம் தாமே –திரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கி–பின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சினில்  தாங்கிக்,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும் –அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன் – மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன் –முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர் – நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றே –எனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர் – வாழ்
        நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!
 புலவர் சா இராமாநுசம்
 (மீள்பதிவு)

Saturday, April 26, 2014

கடந்திட்டேன் ஓரளவு வலியின் துயரே ! –எனவே காணவந்தேன் உறவுகளே நீரென் உயிரே!




முடிந்தவரை கருத்துகளை  எழுதி  வருவேன் –சற்று
     முடியாத திலைதனிலும்  முயன்று  தருவேன்!
விடிந்தவுடன் காணுவது  கணினி  தானே –தனிமை
      வேதனையை, அறியாது  மகிழ  நானே!
வடிந்துவிட்ட  வாய்க்காலாய்  வாழ மாட்டேன் –நீரே
     வருகின்ற வழிதனிலே  ஓய மாட்டேன்!
கடந்திட்டேன்  ஓரளவு வலியின்  துயரே ! –எனவே
    காணவந்தேன்  உறவுகளே நீரென்  உயிரே!

சிலநாட்கள் ஓய்வாக  இருந்த  போதும் – மேலும்
    சிந்தனைகள்  அலையாக  வந்தே  மோதும்
பலநாட்கள்  ஆனதுபோல்  உள்ளச் சோர்வே –சதா
    படுக்கையிலே  கிடப்பதனால் உடலில்  வேர்வே!
அப்பப்பா  கொடுமையது ! தாங்க  இயலா! – மருத்துவர்
    அறிவுரைக்கு  ஏற்பநாளும்  முயல!
எப்பப்பா என்றேநான் காத்துக்  கிடந்தேன் –மீண்டும்
    எழுதிடவே துணிவாக , நன்றிவந்தேன்!

புலவர்  சா  இராமாநுசம்
  

Tuesday, April 22, 2014

ஓட்டுப் போடுதல் நம்கடமை –அது ஒன்றே இன்று நமதுடமை!





இடையில், உள்ளது  ஒருநாளே -நமக்கு
   இருப்பது  தேர்தலில்!   வருநாளே!
படையுள் வீரன்  கைவாளே –என
   பயன்தர, ஓட்டு  அந்நாளே
தடையில் ! சென்றே  போடுங்கள்! –உணர்ந்து
    தக்கவர்  எவரென  தேடுங்கள்
கடையில்  விற்கும்  பொருளல்ல- எதிர்
   காலத்தின் விதியாம் அதைச்சோல்ல!

ஓட்டுப்  போடுதல்  நம்கடமை –அது
   ஒன்றே இன்று  நமதுடமை!
காட்டுத்  தர்பார்  ஒழியட்டும்!-இலஞ்ச
    கயமைக் குணமே  அழியட்டும்!
நாட்டு  நடப்பை  மாற்றிடவே –வெளி
   நாடுகள்  நம்மைப் போற்றிடவே !
கேட்டு மகிழச்  செய்வோமே –பெற்றக்
    கேடுகள்  நீங்க  உய்வோமே!

புலவர்  சா  இராமாநுசம்

  

Saturday, April 19, 2014

கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!



கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக
கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!
உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்
உரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்!

கடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதில்
கண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்!
நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! –மேலும்
நடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே!

எரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா
ஏற்றதென கேட்போரே! தெளிவாய் உள்ளி!
புரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு
போடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே!

இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே
எழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே!
ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அது
உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!


புலவர்  சா  இராமாநுசம்

Thursday, April 17, 2014

நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க! -தேர்தல் நாளன்று இதையெண்ணில் தெம்புங்க!



ஐயாமாரே அம்மாமா  ரேபாருங்க-எங்கும்
அமர்க்களமே ஆகிவிட ஊருங்க
பொய்யான வாக்குறதி ஏனுங்க- நம்மைப்
போடச்சொல்லி வாக்குசீட்டு தானுங்க
ஊழலென்ற வார்த்தைமிக பாவங்க!- அதை
உச்சரிக்க, அனைவருமே! கோவங்க!
சூழலென்ன! செய்யாதெவர்! கேளுங்க!-எடுத்து
சொல்லுதற்கு யாருமில்லா நாளுங்க!

ஓட்டுக்காக ஊரெல்லாம் வருவாங்க - அவர்
உருப்படியா அவங்களென்ன செய்தாங்க!
கேட்டுபலன் ஏதுமிங்கே இல்லிங்க- நம்ம
கேடுகெட்ட அரசியலே தொல்லைங்க!
போட்டுபோட்டு கண்டபலன் ஏதுங்க! ஓட்டு
போட்டபின்னர் பெற்றதெலாம் தீதுங்க
நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க! -தேர்தல்
நாளன்று இதையெண்ணில் தெம்புங்க!


புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...