மதில்மேல் பூணை நிலைபோலும்-நம்
மத்திய அரசின் நிலை!மேலும்
புதிர்போல் பதிலும் தோன்றிடுமே-ஐயம்
புகுந்திட மனதில் ஊன்றிடுமே!
எதிலும் இதுவே வாடிக்கையா-என
எண்ணிட செய்வது வேடிக்கையா
பதிலில் குழப்பமே! தெளிவில்லை!-எங்கள்
பாரதப் பிரதமரே! இதுஎல்லை!
முழுவதும் அரசுக்குக் கிடைக்கிலையா-அன்றி
முழுமனம் கொண்டிட இடமிலையா
அழுவது போலிது நாடகமா-பதில்
அளித்தது எதற்கோ? பூடகமா!
தொழுவது எல்லாம் முடிந்தகதை-இங்கே
தோன்றும் மற்றோர் இடிந்தகரை!
எழுவது தடுத்திட முனைவீரே-ஓட்டு
இலங்கைக்கு எதிர்ப்பாய் தருவிரே!
சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
செய்தன பாபம்! போகட்டும்!
கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!
புலவர் சா இராமாநுசம்

