Showing posts with label அமெரிக்க தீர்மானம் பயன்தரா இந்திய ஆதரவு கண்துடைப்பே. Show all posts
Showing posts with label அமெரிக்க தீர்மானம் பயன்தரா இந்திய ஆதரவு கண்துடைப்பே. Show all posts

Friday, March 22, 2013

செம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே



ஒப்புக்கே தீர்மானம் ஒபாமா கொண்டுவர
செப்பிக்க ஆதரவும்  செப்பியது  இந்தியா
உப்புக்கும்  உதவாத  ஒன்றலவா அதுவும்
தப்பிக்க  மாற்றுவழி தமிழர்களே காணுங்கள்!

ஓரங்க  நாடகத்தை  ஒருவழியாய்  அனைவருமே
பேரங்கம்  தன்னில்  பேசிமுடித்  துவிட்டார்
ஊரெங்கும்  ஊர்வலமே  உண்ணா  விரதமென
யாரிங்கே  செய்யினும்  என்னபயன்  தனித்தனியே!

உள்ளத்   தூய்மையுடன் ஒன்றுபட்ட  நிலையுண்டா
கள்ள   நினைவுடனே  கைகோர்க்கும்  செயல்தானே
தெள்ளத்  தெளிவாகத்  தெரிகிறது  கண்டோமே
வெள்ளம்போல்  மாணவர்கள்  வீறுகொண்ட  பின்னாலும்!

செம்புல  நீராக  செயல்படுவாய்  தமிழினமே
வன்புல வடநாடு  உணரட்டும்  மிரளட்டும்
உன்பலம்  அறியட்டும்  ஒன்றுபடு!  ஒன்றுபடு!!
தம்பலம் காட்டியே  தமிழனே  வென்றுவிடு!!

                புலவர்  சா  இராமாநுசம்





               

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...