Showing posts with label அனுபவம் சமூகம் அவலம். Show all posts
Showing posts with label அனுபவம் சமூகம் அவலம். Show all posts

Friday, October 25, 2013

எங்கேயா அரசாங்கம்? இருக்கு தென்றே –பலர் எண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே!





எங்கேயா அரசாங்கம்?  இருக்கு  தென்றே –பலர்
    எண்ணுகின்ற நிலைதானே நாட்டி  லின்றே!
வெங்காயம் விலைகூட விண்ணை முட்டும்-ஏழை
    வேதனையைச் சொல்லியழ கண்ணீர் சொட்டும்!
தங்காயம் வாடாமல் காரில்  போகும் – கட்சித்
     தலைவர்களே! எண்ணுமிது!  வீணா ! ஆகும்!
பொங்காத மக்களையும் பொங்கச் சொல்லும் –எனில்
     புரிந்துடனே தீர்க்கவழி தன்னை  உள்ளும்!
    
 எருமாட்டின்  மீதுமழைப் பெய்தால்  போல- ஏன்
     இருக்கின்றீர்! வெறுக்கின்றார் ! மக்கள் சால!
திருநாட்டில் யாராலே இந்தப்  பஞ்சம்-பதுக்கல்
     திருடனுக்கே அரசேதான் கொடுக்கும்  தஞ்சம்!
வருநாளில் எப்பொருளும்  வாங்க  இயலா-ஏழை
     வாடுகின்றான்! தேடுகின்றான் !வழியும் புயால
உருவானால் என்செய்வீர்! போவீர் எங்கே – இதை
     உணராது இருப்பீரேல் நடக்கும்  இங்கே!

அளவின்றி  விலைவாசி  உயர நாளும்- ஆட்சி
    அதிகாரம் சுயநலமே  குறியாய்  ஆளும்
வளமான வாதிகளாய்  வலமே வருவீர்- மக்கள்
     வாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்!
களமாகும் வருகின்ற தேர்தல் காட்டும்-  உடன்
     கைகொடுக்க  ஏற்றதொரு திட்டம் தீட்டும்!
உளமறிய உண்மையிது! உணர்தல்  நன்றே!-ஏதோ
      உரைத்திட்டேன் வேதனையை நானும்  இன்றே!

                            புலவர்  சா இராமாநுசம்
    
    

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...