Showing posts with label அவதி. Show all posts
Showing posts with label அவதி. Show all posts

Monday, May 27, 2013

வீழும் கல்வி வளர்சிதான்-இது வேண்டுமா தனியார் பள்ளிகளே


பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வீரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வீரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லி விளக்க தோதாக -தினமும்
செய்திகள் வருதே தீதாக
 

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர் தெழிலாளி !
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட !
கனிவாய்ச் சொல்லியே, இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே !
பிணியாய் ஆனதே இந்நாளில்=இந்தப்
 பிழையும்  மறைவது எந்நாளில் ?

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே !
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதோ தனியார் பள்ளிகளே !
கோழைகள் நடுத்தரக் குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை !
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதார் !
எனவே ,
வாழும்வழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே

புலவர் சா இராமாநுசம்

Saturday, December 15, 2012

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன செய்கின்றீர்



அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
   அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
   வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
   தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
   உணர்ந்த ஞானி அன்னாரே

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...