Saturday, December 15, 2012
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன செய்கின்றீர்
அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
உணர்ந்த ஞானி அன்னாரே
ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்
Thursday, December 13, 2012
எத்தனை நாட்கள் பொறுப்பார்கள் –எனில் என்றுமே உம்மை வெறுப்பார்கள்!
பதிவர்கள் பலபேர்
எழுதவில்லை –தினம்
பவர்கட்
ஆவதா தெரியவில்லை!
இதுவரை தீர்த்திட
முயலவில்லை –மின்
இணைப்பினை
நம்பிப் பயனில்லை!
எதுவரை இந்நிலை!
தெரியவில்லை –மாற்று
எதுவென
ஏதும் புரியவில்லை!
விதியென
கிடப்பதே
நம்நிலையா –இருள்
விலகிட
ஒளிவர வழியிலையா!
முற்றும் முடங்கின தொழில் கூடம் –பூட்டி
மூடிட
கண்ணீர் வழிந்தோடும்!
வற்றின நீர்நிலை
மழையில்லை –இரவு
வந்தால்
கொசுவோ பெருந்தொல்லை!
பற்றின துயரோ
தீயாக –நோய்
பற்றிட , தொற்றிட பேயாக!
பெற்றனர்
நாளும்
துன்பந்தான் –இனிப்
பெருவரோ?
வாழ்வில் இன்பந்தான்!
கடிதம் எழுதி
வருவதில்லை !–நேரில்
கண்டுப்
பேசிடின் தீரும்தொல்லை!
அடிமேல் அடியும்
அடித்தாலே –பெரும்
அம்மியும்
நகரும் அதுபோலே!
துடியாய
நேரில் போவீரே –மெகா
தொடர்கதை
மின்வெட்டை முடிப்பீரே!
முடியா நிலையென
ஏதுமிலை –மேலும்
மௌனம்
காப்பது நீதியிலை!
மத்திய மாநில
அரசுகளே –ஈகோ
மனதை
விடுவீர் அரசுகளே!
நித்தம் மக்கள்
படும்பாடே –மேலும்
நீண்டால்
அடைவீர் பெரும்கேடே!
சித்தம் இரங்கிட
வேண்டுகிறேன் –
உடன்
செயல்பட
உம்மைத் தூண்டுகிறேன்!
எத்தனை நாட்கள்
பொறுப்பார்கள் –எனில்
என்றுமே
உம்மை வெறுப்பார்கள்!
புலவர் சா இராமாநுசம்
Labels:
அரசுகள்
,
ஈகோ மக்கள்
,
துயர்
,
புனைவு
,
மாநில
,
மின்வேட்டு மத்திய
Tuesday, December 11, 2012
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித புத்தரே சொல்லினும் கேளாரே!
மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம்
மீனவர் வலையை அறுக்கின்றான்!
தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
துயரக் கண்ணீர் வடிக்கின்றார்!
ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
எனினும் பழைய காட்சியதே!
வேண்டும் துணிவு! அதுவொன்றே-அவர்
வேதனை போக்கும் வழியின்றே!
எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
எடுபிடி யாக ஆவார்கள்!
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
மேலும் போவது அவமானம்!
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
புத்தரே சொல்லினும் கேளாரே!
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்!
ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
அம்மா அவர்க்கும் கதிநீரே!
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
கொடுப்பீர் மத்திக்கி, இப்போதே!
மீறினால் வருமே போராட்டம்-என
மத்தியில் ஆள்வோர் உணரட்டும்!
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்!
பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்!
அடித்துச் சிறையிடல் தொடர்கதையா-இந்த
அவலம் மீனவன் தலைவிதியா!
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
தமிழக அரசே உடன்ஒல்லை!
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!
புலவர் சா இராமாநுசம்
Friday, December 7, 2012
பல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே !
திரைகடல் ஓடு எனறாரே
திரவியம் தேடு என்றாரே
குறையிலா வழியில் அதைப்பெற்றே
கொள்கையாய் அறவழி தனைக்கற்றே
நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்
நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப்பெறுவீர்
கண்ணியம் கடமை எனவாழ்வீர்
வையம் தன்னில் வாழ்வாங்கும்
வாழின்! வாழ்வில் பெயரோங்கும்
செய்யும் எதையும் தெளிவாகச்
செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
போலியாய் வேடம் போடாமல்
ஐயன் வழிதனில் செல்வீரே
அன்பால் உலகை வெல்வீரே!
தீதும் நன்றும் பிறர்தம்மால்
தேடிவாரா! வருவதும் நம்மாலே!
நோதலும் தணிதலும் அவ்வாறே
நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
சாற்றிய வள்ளுவர் சொல்லொன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
இனிதாம் அதுவும் மிகஎன்றார்!
எல்லார் தமக்கும் நலமாமே
என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரென புகழ்பெற்றே
நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
பழகிட வேண்டும் அன்பாலே
புலவர் சா இராமாநுசம்
திரவியம் தேடு என்றாரே
குறையிலா வழியில் அதைப்பெற்றே
கொள்கையாய் அறவழி தனைக்கற்றே
நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்
நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப்பெறுவீர்
கண்ணியம் கடமை எனவாழ்வீர்
வையம் தன்னில் வாழ்வாங்கும்
வாழின்! வாழ்வில் பெயரோங்கும்
செய்யும் எதையும் தெளிவாகச்
செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
போலியாய் வேடம் போடாமல்
ஐயன் வழிதனில் செல்வீரே
அன்பால் உலகை வெல்வீரே!
தீதும் நன்றும் பிறர்தம்மால்
தேடிவாரா! வருவதும் நம்மாலே!
நோதலும் தணிதலும் அவ்வாறே
நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
சாற்றிய வள்ளுவர் சொல்லொன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
இனிதாம் அதுவும் மிகஎன்றார்!
எல்லார் தமக்கும் நலமாமே
என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரென புகழ்பெற்றே
நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
பழகிட வேண்டும் அன்பாலே
புலவர் சா இராமாநுசம்
Wednesday, December 5, 2012
இதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே
இதுவென் பதிவே
மூன்னூற்று ஐம்பதே
புதுமலர் போன்றே
பூத்திட காத்திட
மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட
நிதியெனத் தந்த
நீங்களே ஆகும் !
என்னிரு கரங்களை
என்றும் கூப்பியே
மன்னிய உலகில்
மன்னும் வரையில்
எண்ணியே தொழுவேன்
இணையில் உறவுமை
கண்ணின் மணியெனக்
கருதியே வாழ்வேன் !
சுயநலம் கருதா
சொந்தங்கள் நீரே
பயனெதிர் பாரா
பண்பினர் நீரே
நயமது
மிக்க நண்பினர் நீரே
செயல்பட என்னைச்
செய்தவர் நீரே !
எண்பது வயதைத்
தாண்டியே இருப்பதும்
உண்பதும் உறங்கலும்
உம்மிடை இருப்பதும்
என்புடை
தோலென என்னெடு இருப்பதும்
அன்புடை உம்மோர்
ஆதர வன்றோ !
இனியும் வாழந்திட
என்வலை வருவீர்
கனியென இனித்திடக்
கருத்தினைத் தருவீர்
பனிமலர் போன்றே
குளுமையும் தோன்ற
நனிமிகு
நாட்களும்! வாழ்வேன் நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Sunday, December 2, 2012
இன்னுமா வாழ்கிறது ஒருமைப் பாடே! –அதை எண்ணியே ஏமாந்து அடைந்தோம் கேடே!
இன்னுமா
வாழ்கிறது ஒருமைப் பாடே! –அதை
எண்ணியே
ஏமாந்து அடைந்தோம் கேடே!
மின்னுமா மின்னலென
வானம் நோக்க –கலையும்
மேகத்தால்
கண்ணிரண்டும் நீரைத் தேக்க
மன்னுமா வாழ்க்கையென
தேம்பு கின்றான் –துயர்
மண்டியதால்
வெதும்பிமனம் கூம்பு கின்றான்!
தன்னுயிரை விடுவதற்கும்
துணிந்து விட்டார்–கன்னடர்
தருவார்கள்
நீரென்றே நம்பிக் கெட்டார்!
வயலெல்லாம் வெடித்துவிடக்
காணும் காட்சி –உழவன்
வாய்விட்டு
அழுகின்றான் ! உண்டா ? மீட்சி!
பெயலின்றி போயிற்றே
பருவக் காலம் –எதிர்
பேயாக
விரட்டுமே வறுமைக் கோலம்!
தயவின்றி ஒருதலையாய்
மத்திய அரசே–வழக்கை
தள்ளிவைக்க
பயிர்கருகி ஆகும் தருசே!
பயனின்றி தமிழகமே வாளாய்க் காண –என்றும்
பழிக்குமே
எதிர்காலம் நாமும் நாண!
கொட்டிவிட்ட
நெல்லிக்காய் மூட்டை
ஆனோம் –ஒன்று
கூடிவிட வழியின்றி சிதறிப் போனோம்!
கட்டிவிட்ட வேலியது
கம்பிபோல இங்கே –மின்
கம்பங்கள் !காணுகின்றோம் சாரம் எங்கே ?
திட்டமில்லை நம்மிடையே
கூடிப் பேச –நல்
திறனிருந்தும் போட்டியிட்டு
வீணில் ஏச!
எட்டியென நம்வாழ்வு கசந்து போகும்
-வரும்
எதிர்கால
நிலையெண்ணில் உள்ளம் வேகும்!
நெய்வேலி மின்சாரம்
மட்டும் வேண்டும் -சொட்டு
நீர்கூட
இல்லையென மறுத்தார் மீண்டும்!
பொய்வேலி ஏகமெனல்
புரிந்து கொள்வோம் –மேலும்
பொறுமைக்கும் எல்லையுண்டு
பொங்கி எழுவோம்!
செய்வீரா
!? இனியேனும் ஒன்று படுவீர் -உடன்
சிந்தித்து செயல்பட
ஈகோ விடுவீர்
உய்வீராம்
அதன்பின்னே எண்ணிப் பாரீர்
-நம்
உரிமையைக் காத்திடத்
திரண்டு வாரீர்
புலவர் சா
இராமாநுசம்
Saturday, December 1, 2012
தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்!
புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை- புலவர் சா இராமாநுசம்
தனவானாய் ஆவதற்குப் பொருளை ஈட்ட-இங்கே
தனிமையெனும் பெரும்கொடுமை என்னை வாட்ட
கனமான மனத்துடனே அவரும் சென்றார்-என்ன
காரணமோ இதுவரையில் வாரா நின்றார்
தினம்தோறும் நான்பெற்ற இன்பம் தன்னை-நல்
திரைகாட்டும் படம்போல காட்டி என்னை
நினைவேநான் உனக்கென்ன தீங்கா செய்தேன்-சுடும்
நெருப்பாகி நாள்தோறும் வாட்டு கின்றாய்
கொம்பில்லா கொடியாக என்னை விட்டே-அந்த
கோமகனும் பொருள்தேடி சென்ற தொட்டே
வெம்பியழும் வேதனையைக் கண்ட பின்பா-மேலும்
வேதனையை தருவதென்ன நல்லப் பண்பா
கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
காரிருளை விரட்டிடுவாய் ஒளியும் பொங்கி
அம்புலியே உனக்கென்ன தீங்கா செய்தேன்-நீயும்
அனலாகி எனையேனோ வருத்து கின்றாய்
அன்றன்று பூத்தமலர் பறித்து வந்தே-தீரா
அன்றன்று பூத்தமலர் பறித்து வந்தே-தீரா
ஆசையுடன் கூந்தலிலே சூடத் தந்தே
என்றும்நான் பிரியேனென சொல்லி சொல்லி-தினம்
என்றும்நான் பிரியேனென சொல்லி சொல்லி-தினம்
எனகன்னம் சிவந்துவிட கிள்ளி கிள்ளி
சென்றவர்தான் இன்றுவரை வரவே யில்லை-ஏதும்
செய்யவழி தெரியாமல் திகைப்பின் எல்லை
தென்றலே நானிருத்தல் அறிந்த பின்னும்-ஏன்
தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்
புலவர் சா இராமாநுசம்
Subscribe to:
Posts
(
Atom
)