பச்சிளம் பாவையவள்
நாசமாக –ஒரு
பாவிமகன்
வனபுணர்வால் உயிரும்போக !
எச்சிலை தேடுகின்ற
நாயும்கூட-தெருவில்
இலைமறவாய் காய்மறவாய் உறவைநாட !
பொற்சிலையாள் பேருந்தில்
தில்லிதன்னில் –ஒருத்தி
பிணமுண்ணும்
கழுகுகளால் அழிந்ததெண்ணில் !
கற்சிலையும் கண்ணீரை
வடிக்குமன்றோ –அட
காமுகரே
உணர்வீரா ? திருந்தலென்றோ ?
தாயுண்டு, தங்கையக்க உமக்கமுண்டா –ஏன்!
தாரமெனச்
சொல்லுதற்கோர் மங்கையுண்டா
பேயுண்டு என்பதற்கா
பிறந்தீர்நீரும் –காமப்
பேய்களே
தாங்காது எந்தவூரும் !
வாயுண்டு கதறியழ
வலிமையில்லை –இளம்
வஞ்சியர்கள்
வாழ்வதற்குக் காப்புமில்லை!
நோயுண்ட மனங்கொண்டார்
பெருகலானார்-எங்கு
நோக்கினும் பெண்னினமே
கருகலானார்!
வடநாடு பொங்கியெழ
அங்கேயேனோ –
தம்
வாயடைத்துக்
கிடக்கின்றார் இங்கேயேனோ !
முடமாகிப் போனாயோ
தமிழர்நாடே -கட்சி
முரண்பாடால்
வந்ததாம் இந்தக்கேடே!
நடமாடும் தெய்வந்தான்
பெண்களன்றோ-நாளும்
நடப்பதனைக் காணாகண்
புண்களன்றோ!
திடமான முடிவெடுத்து
பெண்மைகாப்பீர் –
எனில்
தேவையில்லை
பெண்னினமே அழித்துவிடுவீர் !
புலவர் சா
இராமாநுசம்

