Saturday, January 7, 2012

மனித நேயம் இல்லையா ?


      
மனித  நேயம்   இல்லையா?
      மத்திய  அரசே  சொல்லையா?

தினமேத்  தொல்லைப்  படுகின்றான்
      தேம்பியே  மீனவன்  கெடுகின்றன்
மனமே  இரங்க  வில்லையா
       மனதில்  அரக்கனா சொல்லையா

சுண்டைக்  காய்போல்  அந்நாடே
    சொன்னால் வெட்கம்  பெருங்கேடே
அண்டையில்  இருந்தே  தரும்தொல்லை
    அளவா?  அந்தோ  துயரெல்லை

கச்சத்  தீவைக்  கொடுத்தீரே
      காரணம்  எதுவோ  ?கெடுத்தீரே
அச்சப்  பட்டே மீனவனும்ப
       அல்லல்  படுவதைக்  காண்பீரே

படகொடுப்  பிடித்தே  மீனவரைப்
      பாழும்  சிறையில்  தள்ளுகின்றான்
இடமிலை  மீனவர்  உயிர்வாழ
     எண்ணமும்  உமக்கிலை  அவர்வாழ

மாநில  அரசையும்  மதிப்பதில்லை
    மத்திய  அரசுக்கோ  செவியில்லை
நாமினி  செய்வதை  ஆய்வோமா?
      நல்லது  நடப்பின்  உய்வோமா?

 
                            புலவர்  சா  இராமாநுசம்


Wednesday, January 4, 2012

கவிதை பிறந்த சூழ்நிலை!-2

       
                புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
           போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!


பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
          பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்
  நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
          நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்
  வாயெடுத்து  சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
           வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்று
  தாயெடுத்து அணைக்காத குழந்தை போல-ஐயா
         தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால


  நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
           நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே   
  சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
         செப்பினால்  நாங்களும் அதனைக் கண்டே
  தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
           தகராறு வேண்டாமே வயிறும் மூட
  இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
         இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்


   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
            மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
   கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அட்டா
            கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்
    அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
            அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
    படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
             பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!


                                புலவர் சா இராமாநுசம்

Sunday, January 1, 2012

வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!



இதயம் கனிந்த நல்லோரே—என்
   இதயத்தில் வாழும் பல்லோரே!
உதயம் ஆங்கிலப் புத்தாண்டே!-இன்று
   உளங்கனி வாழ்த்துகள் உங்களுக்கே!

இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
   இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
   தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!

சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
   சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை  தவழட்டும்!-மக்கள்
   நிம்மதி யாக வாழட்டும்!

பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
   பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
   கேவல மான இதனாலே!

உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
   ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
   ஏதும் அறியாக் கோழைகளே!

ஊரில் இல்லை ஒருவாரம்-எனவே
   உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
   வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!

                         புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...