Friday, January 13, 2012

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும் !


தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
      தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
      புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
 ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
      அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
 மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
       மேதினி உணர்ந்திட இங்கே  விண்டோம்

 காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
        கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
 வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
       விளைந்திட அறுவடைப்   பொங்க லிட்டான்
 மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
       மனித நேயத்துக்கே வித்தி டுவான்
 பாட்டுக்கே அன்னவன் உரிய  வனாம்-தமிழ்ப்
       பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!
      
 உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
      உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
 துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
      தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
 கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
      கைகள் முடங்கிடின்  எதுவு மின்றே
 மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
       மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

 புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
      போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
 இயலாது! இயலாது !கண்டோ  மன்றே-அந்த
        ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
       முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை  மக்க ளய்யா-உடன்
        பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

        அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!

                                 புலவர் சா இராமாநுசம்

      

Thursday, January 12, 2012

என்றும் இளமை குன்றா மொழியே !


எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 10, 2012

தானேப் புயலும் வந்தாயே !

தானேப்  புயலும்  வந்தாயே-ஊரின்
        தடமே  மாறிடச்  செய்தாயே
ஏனோ  இத்தனைக் கோபம்தான்-அந்த
        ஏழைகள்   வாழ்வே  பாபம்தான்
 காணாக்  கொடுமை  இதுவரையே-நீ
        காட்டிய  வேகம்  இலைவரையே
 வீணாய்   போனதே   ஊரெல்லாம் -பெற்ற
        வேதனை   உன்கோப்  பழிசொல்லாம்

 முந்திரிக்  காடுகள்  அழிந்தனவே-நன்கு
        முற்றிய   கரும்புகள்  அழிந்தனவே
  சிந்தினர்  கண்ணீர்  மழைபோல-இனி
        செழிப்பது   எப்போ  முன்போல
  வந்தது   சிலமணி   நேரம்தான்-ஆனால்
         வாழ்வையே  அழித்தது   கோரம்தான்
  நிந்தனைப்  பெற்றாய்  தானேநீ-என்றும்
         தீங்கா  நிலையில்  ஏனோநீ

  குடிநீர்க்   கூட  கிடைக்கவில்லை-எனக்
         குமுறும்   மக்கள்  படும்தொல்லை
 இடிபோல்   நெஞ்சில்   விழுகிறதே-மக்கள்
      இனமே   முற்றும்    அழுகிறதே
   கொடிய   அரக்கன்  செயல்போல-பெரும்
       கொடுமையே  தந்தாய்!  புயல்சால
   விடியா   இரவுகள்  ஆனதுவே-மின்
      விளக்கு  முற்றும்  போனதுவே!

 
  எத்தனைக் கோடிகள்  போயிற்றே-உயிர்
       இழப்புகள்   பலவும்  ஆயிற்றே
  சித்தமே   கலங்கிக்  கிடக்கின்றார்-ஏதும்
       செய்வது   அறியா ?  நடக்கின்றார்
  இத்தனைக்   காலம்   உழைத்தோமே-இனி
       எப்படி   நாமும்  பிழைப்போமே
  பித்தனாய்ப்   புலம்பிட   ஆனாரே-துயரப்
      பேயிக்கு   ஆளாய்   போனாரே!

                 
                புலவர்  சா  இராமாநுசம்
 




 

Sunday, January 8, 2012

மலரினமே மலரினமே


 மலரினமே  மலரினமே
         மாசற்ற    மலரினமே
 நிலமடந்தை   நீள்வயிற்றில்
        நீபிறந்தாய்   ஆனாலும்
 பலரகத்தில்   பாரினிலே
       பலவகையில்    மலர்ந்தாலும
 சிலரகத்தில்  மட்டுமந்த
        சிரிக்கின்ற   மணமேனோ

 வண்ணத்தில்  பலவகை
          வடிவத்தில்   பலவகை
  எண்ணத்தில்     பலவகை
         எழுகின்ற  கவிவகை
  கண்ணைத்தான்   பறிக்கின்றீர்
        கற்பனையில்   பிறக்கின்றீர்
  பெண்ணைத்தான்   பாராட்ட
         பெருமையுடன்   சீராட்ட!

  கோடிக்   கணக்கினிலே
       குவிந்தாலும்   ஒருநாளில்
 வாடிப்    போவதனால்
      வருந்திடிதே   எமதுள்ளம்
  தேடிவந்தும்மை   தெரிவையரும்
     தேவையெனப்   விலைகொடுத்தே
  சூடிமகிழ்வாரே   மணத்தைச்
     சொல்லிப்  புகழ்வாரே

      புலவர்  சா  இராமாநுசம்
 



     

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...