Thursday, January 9, 2014

பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமுன் கவிப்பெண்ணே!தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொலையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன் காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே

என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள்
மறுத்தால் வாழ்வே சுடுகாடே
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்

எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும் கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீராப்
பழியும் வருமுன் கவிப்பெண்ணே!

புலவர் சா இராமாநுசம்

Monday, January 6, 2014

என் முகநூல் பதிவுகள்-7

ஒரு செயல் நடை பெறாமல் கெட்டு போவதற்கு இருவைக் காரணங்கள் உள்ளன! ஒன்று , நாம் செய்யவேண்டாத , செய்வதற்குத் தகுதி அற்ற, செயலை , செய்ய முனைந்தால்
அதனால் கெடுதல் உறுதியாக வரும் இரண்டு! செய்ய வேண்டிய செயலை, செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் விட்டாலும் கெடுதல் உறுதியாக வரும்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (குறள்)


புத்தாண்டு பிறந்து விட்டது! தினசரி நாள்காட்டி ஒன்றை வாங்கி வீட்லே தொங்க விட்டிருப்போம்! இன்று, தேதி , இரண்டு ! காலையிலேயே நாள் காட்டியில் ஒரு,தாளை
கிழிச்சிருப்போம்! பொதுவா நாம் கிழிச்சது ஒரு தாளென
நினைச்சிருப்போம்! ஆனா , நாம் கிழிச்சது ஒரு தாளை
மட்டுமல்ல! நம் வாழ்கையின் , ஒரு நாளையும் கிழிச்சோம்
என்பது எத்தனை பேருக்குத் தெரியும்! அதை, வள்ளுவர் தெளிவா உணர்ந்து சொல்வார்!

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார் பெறின்.( குறள்)


அனுபவம் மிக்க அறிவு சார்ந்த பெரியாரோடு தொடர்பு கொண்டு ஆராய்ந்து , சிந்தித்து செய்யும் எந்ததொரு செயலையும்,
செய்ய, முயல்வாற்கு , செய்ய அரிய செயல் என்று, எதுவுமில்லை!

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்(கு)
அரும்பொருள் யாதொன்றும் இல் (குறள்)


ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றால் அவர். நோய் நீக்க என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதுபற்றி கூட
வள்ளுவர் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்

முதலில், மருத்துவர் , வந்த நோயாளியிடம் என்ன நோய் என்பதை விரிவாக விசாரித்து
அறிந்து, அதன் பின் நோய்வந்த காரணத்தையும் தெளிவாக அறிய வேண்டும். பின்னர், அதனைப் போக்கும் ,உரிய மருந்து
எது, என்பதையும் கண்டறிந்து, பிறகு, அதனை எந்த வகையில் நோயாளிக்குத் தருவதெனவும் முடிவு செய்ய வேண்டும்

நோய்நாடிநோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.-குறள்


உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வதற்குச் செல்வம் தேவை! ஆகவே அதனைப் பெற பல வகையில் முயற்சி செய்யறோம்!ஆனால் , அச் செல்வமானது, நாம் தேடாமலேயே,( அதுவே )நம்மை அடைய வழி கேட்டு வருவதற்கு ,வள்ளுவர்
சொல்வது, நாம் செய்யும் எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை நம்மிடம் இருந்தால் போதும் என்பதே ஆகும்!


                              புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...