Thursday, December 15, 2011

முந்தைய பதிவிற்கு முக்கிய விளக்கம்!



அன்பர்களே!
          முந்தைய பதிவில் முதற்கட்டப் பணிகளைப் பற்றிய
விபரங்களைக் குறிப்பிட்டிருந்தேன்
           இன்று இரண்டாவதுக் கட்டப்பணிகள் பற்றி எழுது
வதாக இருந்தேன்.அதைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டி
இருப்பதால் திங்களன்று எழுதுகிறேன்
    அதற்கு முன்னதாக சிறு விளக்கம் தர விரும்புகிறேன்
         முந்தைய பதிவில் மூன்று மாவட்டங்கள் என்று நான்
குறிப்பிட்டதை மற்ற மாவட்டங்கள் ஏதோ தங்களை ஒதுக்கி விட்ட
தாகக் கருதுவதுபோல் ஐயப்படுகிறேன்! எந்த மாவட்டமானாலும்
யார் விரும்பினாலும் தாராளமாக வரலாம்
         மேலும் தற்போது ஏற்படுத்தும் பொறுப்பாளர்கள் தற்
காலிகமே! அவர்கள் பதவிக்காலம் இரண்டொரு மாதங்களே
ஆகும் பொங்கல் திருநாள் சென்றபின் சனவரி கடைசி வாரத்தில்
அல்லது பிப்ரவரி முதல் வரத்தில் எல்லா மாவட்டங்களைச்
சேர்ந்த  பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி முறையாக
பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் அவர்களே
அதிகாரப் பூர்வமாகச் செயல் படுவபராவார்
          உடனடி பதிவு செய்வதற்கும் இந்த இடைக்
காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதற்கும்
இந்த தற்காலிக அமைப்புத்  தேவையாகும்!
         எந்த மாவட்டங்களில் எத்தனைப் பேர் உள்ளனர்
என்ற கணக்கு எனக்குத் தெரியாது. எனவேதான் தற்போது
பதிவு செய்ய நமக்குத் தேவை குறைந்த எண்ணிக்கை
தானே,பக்கத்துப்பக்க  மாவட்டங்களே போதுமே சற்று
தூரமிருந்து  வருவது வீண் சிரமம்தானே என்று கருதினேன்
     
         ஆர்வத்தோடு யார் வருவதானாலும் நன்மையே!
மனங்கலந்து பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்!
எத்தனை பேர் வருவார்கள் என்ற கணக்கு முன்னதாக
எனக்குத் தெரிந்தால் தான் கூட்டம் நடத்த ஏற்ற இடம்
ஏற்பாடு செய்ய இயலும்
         ஆகவே யார் யார் வருகிறீர்கள் என்பதை இப்
பதிவின் கீழ், பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு
உறுதிப்படுத்தி மறுமொழி தருமாறு வேண்டுகிறேன்
      நான்கு நாட்களுக்குள் அதாவது திங்கள்வரை
எதிர் பார்க்கிறேன்!
                நன்றி!            அன்பன்
                            புலவர் சா இராமாநுசம்
                                          வணக்கம்  

       தொலைபேசி -24801690  செல் -9094766822
                              

Wednesday, December 14, 2011

இனிய வலைப் பதிவு அன்பர்களே!



இனிய வலைப் பதிவு அன்பர்களே!
                               வணக்கம்!

      நமக்கொருப் பாதுகாப்பாகச் சங்கம் ஒன்று தேவை
என்று நான் எழுதியிருந்த கருத்துக்கு ஆதரவாகவும்,
 ஆலோசனைக் கூறியும் நாற்பத்தெட்டுபேர் மறுமொழி
அளித்துள்ளீர்கள்
       உங்கள் அனைவருக்கும் என் நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
        தனி மரம் தோப்பாகாது நான் மட்டுமே எதையும்
செய்துவிட இயலாது மேலும் என் வயது எண்பது என்பதை
நீங்கள் அறிவீர்கள்.
    எனவே முதலிலேயே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்
சிலர் எழுதியுள்ளதைப் போல நானே முன்நின்று,அல்லது
பொறுப்பேற்று நடத்துவது என்பது வயதின் காரணமாக
 இயலாத ஒன்று  என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்
கொள்கிறேன் உடல் உழைப்பு தவிர மற்ற எந்த உதவிகளையும்
செய்யத்தயாராக உள்ளேன்
      ஆனால் சங்கத்தைப் பதிவு  செய்யும் வரை வேண்டிய
முன் ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்!
     முதற்கண் சங்கம் பற்றிய சில குறிப்புகளை இங்கே
தருகிறேன்
       சட்டப்படி  சங்கத்தைப் பதிவு செய்ய ஏழு முதல் பதினைந்து
இருபது உறுப்பினர்கள் இருந்தாலே போதும். பதிவு செய்து விடலாம்
 அதாவது,தற்காலிகமாக தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர்
ஆகிய பொறுப்பாளர்களையும் மற்றவர் உறுப்பினர்களாகவும் அமைத்து
 அவர்களின் கையொப்பத்தோடு முகவரியும் குறிப்பிட்டு பதிவகத்தில்
உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்
        இது, முதல் பணி!
அடுத்து இரண்டாவது கட்டமாகநாடு தழுவிய பொதுக்குழு, ஆட்சிக்குழு,செயற்குழு
ஆகியவற்றை அமைத்தல் வேண்டும் இது இரண்டாம் கட்டப் பணி!
       முதற் கட்டப் பணி முறையாக அமைத்து அதன் பிறகு
இரண்டாம் கட்டப் பணியைத் தொடங்கலாம்
         முதற் கட்டப் பணிப்பற்றிய என் கருத்துக்கள்!
 
1 பதிவு சென்னையில் செய்ய வேண்டும்.
  2 தேவையான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்

இதற்கான வழியாக நான் கருதுவது, சென்னை
செங்கை,திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட
வலைப் பதிவர்களை சென்னையில் ஒரு பொது
இடத்தில் கூட்டி  கலந்தாய்வு செய்து மேற்
கண்ட தற்காலிகப் பொறுப்பாளர்களை
 தேர்வு செய்து பதிவு செய்யலாம்
    
        இதற்கான பணிகளை நான் செய்கிறேன்!
இக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதானால்
உங்கள் கருத்துக்களை உடன் முன்போல்
மறுமொழி வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்!
                        அன்பன்
               புலவர் சா இராமாநுசம்


      
    

Monday, December 12, 2011

எழுவாய்த் தமிழா எழுவாயா...?


எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
     இடித்த  பின்னர்  அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
     கண்டவர் புத்தி மாறட்டும்

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
     மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
    ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
     துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
     ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே

திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
    தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
    குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
    சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
     பண்பா ? அறித்திடு கேரளமே!

அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
     அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
      எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
      தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில் நோயே உற்றவர்கள்

உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
    உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
    சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்


 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...