Saturday, November 24, 2012

சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம் செழிக்க வாங்கித் தருவாயா!



        மாவீரர்  நினைவாக...


வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைசுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றி கண்துஞ்சல்
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

                 புலவர் சா இராமாநுசம்

Thursday, November 22, 2012

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்


         இனிய உறவுகளே!  மாவீரர்கள் நினைவு  வாரமாக இம்மாதம் 21 முதல்27 வரை  போற்றப்படுவதை , ஒட்டி முன் நான், ஈழம் பற்றி எழுதிய கவிதைகள் மீள் பதிவாக தினம் ஒன்று வெளிவரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்


ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


                                       புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 20, 2012

எம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே



எம்மொழி உமது தாய்மொழி யென்றே 
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே 
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே 
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே 

என்றும் இளமை குன்றா மொழியே 
ஈடே இல்லா தமிழரின் விழியே 
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே 
நானிலம் போற்றும் வளமையும் உண்டே 

கன்னித் தமிழாம் கனியின சுவையாம் 
காலத்தால் என்றும் அழியா மொழியாம் 
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம் 
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம் 

இன்னல் பலபல எய்திய போதும் 
எதிரிகள் செய்திட கலப்பட தீதும 
கன்னல் தமிழே கலங்கிய தில்லை 
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை 

புலவர் சா இராமாநுசம்

இடர்தனை நீக்கிட எண்ணிப் பாரீர் –ஒன்றாய் இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!




தயக்கமது வலைதன்னில் காணு  கின்றேன் மனத்
   தளர்வுதனை பலரிடமும்  காணு  கின்றேன்!
வியப்பதென்ன!? இதுபற்றி அறிவீர் நீரே இந்த
   வேதனையைத் தீர்திடவும் முயல்வீர் நீரே!

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் இனியும்
    ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்
பொறுமைக்கும் அளவுண்டாம் எண்ணிப் பாரீர் துயர்
    போக்கிட ஒன்றென திரண்டு  வாரீர்

மூத்தாரா இளையாரா பேதம்  வேண்டாம் தன்
     முனைப்பிங்கே அணுவளவும் அறவே வேண்டாம்
காத்திட  வேண்டாமா நமது உரிமை இதைக்
    கண்ணென எண்ணுதல் ஆமே! பெருமை

அழுதாலும் தவறென்று  சொல்லி நம்மை  -இனியும்
   அடக்கிட அதிகாரம் முயலும் உண்மை!
எழுவீரா தொழுவீரா  எண்ணிப் பாரீர் நம்மின்
   எதிர்கால நிலையெண்ணி திரண்டு  வாரீர்!

சிதறிய தேங்காயாய் இருத்தல் நன்றோ உடன்
   சிந்தித்து செயல்பட வேண்டும் இன்றோ!?
பதறியே எழுந்திட வேண்டும்1 அன்றோ!-மேலும்
   பார்ப்பதா வேடிக்கை நாளும் நன்றோ!

தொடர்கதை ஆகுமுன்  முடிவெ டுப்பீர் எனில்
    தூண்டிலில் மீனெனத் துடிது டிப்பீர்!
இடர்தனை  நீக்கிட எண்ணிப் பாரீர் ஒன்றாய்
    இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!

                      புலவர் சா இராமாநுசம்
 




Sunday, November 18, 2012

எங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா!



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே!
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல!

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னே!
மற்றது பின்னர் ஆகட்டுமே-குப்பை
     மலையென கிடப்பது போகட்டுமே!
குற்றம் சொல்வதென்  நோக்கமல்ல-இது
     குத்தும் கவிதை ஆக்கம்லல!
வெற்றுச் சொல்லுமி துவல்ல-பட்ட
     வேதனை விளைவா மிதுசொல்ல!

அண்மை காலமாயிவ் வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்ப தெவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தாலே போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றேதான்  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கிப்  பாவை!
சொன்னதே! ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீரா ? வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

  குறிப்பு- மீள் கவிதை. பட்டாசுக்குப்பையோடு இன்று சென்னை
                    காட்சி அளிக்கும் பரிதாப நிலை.

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...