Saturday, December 29, 2012

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்




தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி
   தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்
வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக
    வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
   போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
ஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த
   அவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்

ஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்
    உட்கார நாற்காலி ஒன்று தந்தால்
பாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்
   பண்பல்ல! ஒம்புங்கள் உயர்ந்த நெறியே
யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
   எண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே
சீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்
    சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்

ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது
   ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
    நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
   சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
   போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்
   

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என
   உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான்  அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்
   நாடெங்கும் கொள்கையென பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
   இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
   ஏங்கிட நீங்குமா சாதி மடமை! 

                  புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 27, 2012

கற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகரே உணர்வீரா ? திருந்தலென்றோ




பச்சிளம்  பாவையவள்  நாசமாக ஒரு
    பாவிமகன்  வனபுணர்வால்  உயிரும்போக !
எச்சிலை   தேடுகின்ற   நாயும்கூட-தெருவில்
    இலைமறவாய் காய்மறவாய்  உறவைநாட !
பொற்சிலையாள்   பேருந்தில்   தில்லிதன்னில் ஒருத்தி
    பிணமுண்ணும்  கழுகுகளால்  அழிந்ததெண்ணில் !
கற்சிலையும்   கண்ணீரை  வடிக்குமன்றோ அட
    காமுகரே   உணர்வீரா ? திருந்தலென்றோ ?

தாயுண்டு,  தங்கையக்க உமக்கமுண்டா ஏன்!
    தாரமெனச்   சொல்லுதற்கோர்   மங்கையுண்டா
பேயுண்டு  என்பதற்கா  பிறந்தீர்நீரும் காமப்
      பேய்களே  தாங்காது   எந்தவூரும் !
வாயுண்டு   கதறியழ   வலிமையில்லை இளம்
    வஞ்சியர்கள்  வாழ்வதற்குக்  காப்புமில்லை!
நோயுண்ட  மனங்கொண்டார்  பெருகலானார்-எங்கு
     நோக்கினும்  பெண்னினமே   கருகலானார்!

வடநாடு   பொங்கியெழ  அங்கேயேனோ தம்
    வாயடைத்துக்  கிடக்கின்றார்  இங்கேயேனோ !
முடமாகிப்  போனாயோ  தமிழர்நாடே  -கட்சி
    முரண்பாடால்  வந்ததாம்  இந்தக்கேடே!
நடமாடும்  தெய்வந்தான்  பெண்களன்றோ-நாளும்
      நடப்பதனைக்  காணாகண்   புண்களன்றோ!
திடமான  முடிவெடுத்து  பெண்மைகாப்பீர் எனில்
    தேவையில்லை  பெண்னினமே  அழித்துவிடுவீர் !

                        புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, December 26, 2012

உண்ணுகின்ற உணவுதனை தந்தோ னின்றே – நஞ்சு உண்ணுகின்றான் சாவதற்கே கொடுமை யன்றே!




உண்ணுகின்ற  உணவுதனை   தந்தோ  னின்றே நஞ்சு
   உண்ணுகின்றான்  சாவதற்கே  கொடுமை  யன்றே!
எண்ணுதற்கே   இயலாத   துயரந் தானே அதை
    எண்ணுகின்ற  அரசுகளும்  இல்லை  வீணே!

பாடுபட்டு   இட்டபயிர்   கருகிப்  போக தீயும்
   பற்றிவிட   வயிரெரிந்து  உருகிச்  சாக
மாடுவிட்டு  மேய்க்கின்ற  காட்சி  காண்பீர் நல்
   மனங்கொண்டார்  அனைவருமே  கண்ணீர்  பூண்பீர்!

இட்டபயிர்  இட்டவனே  அழிக்கும்   நிலையே இன்று
   இருக்கிறது   தமிழ்நாட்டின்  வறட்சி  நிலையே!
திட்டமில்லை  தீர்பதற்கும்  முயற்சி  இலையே உழவன்
    தேம்பியழின்    வைப்போமா   அடுப்பில்  உலையே!

நிலத்தடி  நீர்கூட  எடுக்க  இயலா சோக
    நிலைதானே  மின்வெட்டும்  பாழும்  புயலாய்!
அலகிட்டு   சொல்வதற்கும்  முடியா  வகையே மக்கள்
      அன்றாட  வாழ்க்கையிலே தீராப்  பகையே!

நெய்வேலி  கல்பாக்கம்   இருந்தும்  இங்கே நாளும்
    நிலையான  மின்வெட்டே !ஆனால் பங்கே !?
பொய்வேலி  ஏகமெனல்  இந்திய  நாடே என்ற
   போதனை  கேட்டதால்   வந்தக்  கேடே!

கத்தியும்  கதறியும்  மக்கள் ஓய கேளாக்
     காதென  சங்கொலி சென்றுப்  பாய,
சித்தமும்  கலங்கியே  செய்வ தறியார் கல்லில்
    செதுக்கிய  சிலையென  இருப்பர்  உரியார்!

பஞ்சமும்  பசியுமே  வாட்டும்  போதே இன்று
    பதவிசுகம்  காண்பார்கள்  உணர்வார்  தீதே!
கொஞ்சமும்  அக்கறை   எடுப்பார்  இல்லை பல
    கட்சிகளும்  இருந்துபயன்!?  ஒற்றுமை இல்லை!

நாதியற்றுப்  போனாரே   உழைக்கும்  மக்கள் வாழும்
     நம்பிக்கை   ஏதுமின்றி  ஏழை  மக்கள்
வீதிவலம், போராட்டம்  நடத்து  கின்றார் இன்னும்
     வேற்றுமையில்  ஒற்றுமை  இதுவா ? என்றார்!

                             புலவர்  சா  இராமாநுசம்
    

Monday, December 24, 2012

வைகுண்ட வாசா வானோர்க்கும் நேசா



சூழும்  இடர்தன்னை  சுடர்கண்ட  பனியாக்கும் 
     ஏழுமலை  யானே  எனையாளும்  பெருமாளே
வாழும்  நாளெல்லாம்  உனைவணங்கி  நான்வாழ
     பாழும்  மனந்தன்னை  பதப்படுத்த  வேண்டுகிறேன்

அன்னை  அலர்மேலு  அகிலாண்ட  நாயகியே
     பொன்னை  வேண்டியல்ல  பொருளை  வேண்டியல்ல
உன்னை  வணங்குதற்கே  உயிர்வாழ  விரும்புகின்றேன்
     என்னை  ஆட்கொள்வாய்  எனையாளும்  தாயேநீ

பஞ்சுப்  பொதிபோல  பரவி  வருகின்ற
     மஞ்சு  தவழ்ஏழு  மலையானே  கோவிந்தா
தஞ்சம்  நீயென்றே  தலைவணங்கும்  என்போன்றார்
     நெஞ்சில்  நீங்காது  நிலைத்திருக்க  வேண்டுகிறேன்

வாழிவாழி  யென  வானோர்கள்  கூத்தாட
     ஆழிகடைந்  தமுது  அளித்தவனே  மங்கையர்கள்
தாழிகடைந்  தெடுத்த  தயிர்வெண்ணை  திருடியவர்
      தோழி  பலர்துரத்த  தொடர்ந்தோடி  ஒளிந்தவனே

தத்தம்  குறையெல்லாம்  தடையின்றி  நீங்குமென
     நித்தம்  உனைநாடி  நீள்வரிசை  தனில்நின்று
சித்தம்  மகிழ்வுடனே  செப்புகின்ற  கோவிந்தா
     சத்தம்  உன்செவியில்  சங்கொலியாய்  கேட்கிறதா

வெண்ணை  உண்டவாய்  விரிய  வியனுலகு
     தன்னைக்  கண்டதாய்  தடுமாறி  மகிழ்ந்தாட
மண்ணை  அளந்தவனே  மாபலியின்  தலையோடு
     விண்ணை  அளந்தவனே  விமலனே  வணங்குகிறேன்

மலையில்  வாழ்பவனே  மலையை  நீதூக்கி
     தலையின்  மேல்வைத்தே  ஆவினத்தை  காத்தவனே
அலையில்  கடல்மீது  ஆனந்தப்  பள்ளியென
     இலையில்  துயின்றவனே  இறைவாநான் தொழுகின்றேன்

ஆதிமூல  மென்ற  அபயக்குரல்  வந்துன்
     காதில்  விழச்சென்று  காத்தவனே  கோவிந்தா
வீதிதனில்  வருவாய்  வீழ்ந்து  வணங்கிடுவார்
     தீதுதனை  முற்றும்  தீர்த்திடுவாய்  கோவிந்தா

எங்கும்  உன்நாமம்  எதிலும்  உன் நாமம்
     பொங்கும்  உணர்வெல்லாம்  போற்றும்  திருநாமம்
தங்கும்  மனதினிலே  தடையின்றி  உன்நாமம்
     பங்கம்  அடையாமல்  பாஞ்சாலி  காத்ததன்றோ

அம்மை  அலர்மேலு  அப்பன்  திருமலையான்
     தம்மை  நாள்தோறும்  தவறாமல்  வணங்கிவரின்
இம்மை  மறுமையென  எழுபிறவி  எடுத்தாலும்
     உம்மை  மறந்தென்றும்  உயிர்வாழ  இயலாதே

 பாடி  முடித்திவிட  பரந்தாமா  உன்அருளை
     நாடி  வருகின்றேன்  நாயகனே  வேங்கடவ
 தேடி  வருவார்கு  திருமலையில்  உனைக்காண
     கோடிக்  கண்வேண்டும்  கொடுப்பாயா  பரந்தாமா

 முற்றும்  உன்புகழை  முறையாக  நான்பாட
     கற்றும்  பல்லாண்டு  காணாது  தவிக்கின்றேன்
 பற்றும்  அற்றவரும்  படைக்கின்ற  பிரம்மாவும்
     சற்றும்  அறியாருன்  திருவடியும்  திருமுடியும்

 வேதத்தின்  வித்தேயுன்  விளையாட்டை  யாரறிவார்
     நாதத்தின்  சத்தேயுன்  நாடகத்தை  யாரறிவார்
 பேதத்தை  கொண்டவுள்ளம்  பெருமாளே  என்போன்றார்
     சோகத்தை  நீக்குமென  சொல்லியிதை  முடிக்கின்றேன்

  தாங்கும்  நிலையில்லா  தடைபலவே  வந்தாலும்
      நீங்கும்  படிசெய்யும்  நிமலனே  நாள்தோறும்
  தூங்கும்  முன்வணங்கி  தூங்கி  எழவணங்கும்
      வேங்கி  தாசன்நான்  விடுக்கின்ற  விண்ணப்பம் 

  செல்லும்  திசைமாறி  சென்றுவிடும்  கப்பலென
      அல்லும்  பகலுமென்  அலைகின்ற  உள்ளத்தை
  கொல்லும்  அரவின்மேல்  கொலுவிருக்கும்  கோவிந்தா
     ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்


                             புலவர் சா இராமாநுசம்

இன்று, வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு - மீள்பதிவு

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...