Saturday, September 13, 2014

இறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை இணையதள உறவுகள்! உண்மை! ஆமே!


மறவாமல் நாள்தோறும் தொழுவோன் உன்னை –ஏழு
மலைவாச காப்பவன் நீதான் என்னை
உறவானார் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார் –வரின்
உதவிட வேண்டுமே! அச்சம் கண்டார்
இறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை
இணையதள உறவுகள்! உண்மை! ஆமே!
பிறவாத உடன்பிறப்பே ! அவர்கள் இன்றும் – வந்து
பேசுகின்றார் !என்னோடே வாழ்க என்றும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, September 12, 2014

கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!


கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த
கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!
கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்
கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?
நிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்
நிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்
வலைவீசி தேடுவதாய் காவல் துறையும் –செய்தி
வருகிறது! என்னபயன்! எப்படிக் குறையும்!?

பொதுமக்கள் ! நமக்குமிதில் பொறுப்பு வேண்டும்-வீட்டைப்
பூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்!
எதுவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு
ஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்!
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
முறையாக தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
இதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ
இயன்றவரை நமைக்காக்க முயலின்! உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 9, 2014

தேக்கம் இன்றி கவிதைகளைத் தெளிவாய் நானும் எழுதிடவே!



முன்னுரை

கண்ணாய் விளங்கும் நண்பர்களை
கவிதை நடையில் எழுதுமென
அண்ணா என்றே ஆணையிட்ட
அன்பு சோதரி இராஜேஷ்வரிக்கு
நன்றி நன்றி நன்றி


நண்பர்கள் பட்டியல் பெரிதாமே
நவிலுதல் எனக்கே அரிதாமே
பண்பொடு பழகினர் அவர்தாமே
பலரை விட்டால் தவறாமே

ஆனால் சொல்ல ஆகாதே
அதனால் அவர்மனம் நோகாதோ
நானாய் எடுத்த முடிவொன்றே
நன்கே ஆய்ந்து சரியென்றே

பள்ளி தொட்டு இன்றுவரை
பாசம் காட்டி பழகியுரை
அள்ளிக் கொட்ட அன்பாலே
அணைத்தான் அவனே பண்பாலே

சொல்லப் பெருமிதம் கொள்கின்றேன்
சொல்லின் அவன்பெயர் சதாசிவம்
எள்ளுள் இருக்கும் எண்ணையென
என்னுள் அவனது அன்பேசிவம்
இன்று
கருத்தை அச்சில் தட்டுகிறேன்
கவிதையாய் வலையில் தீட்டுகிறேன்
திருத்த வேண்டின் திருத்துகிறேன்
தினமும் வலையில் பொருத்துகிறேன்
அன்று
எழுதி அடித்து எழுதிடுவேன்
எடுத்து அதனை படித்திடுவான்
பழுதே இன்றி படியெடுத்து
படிக்க என்னிடம் கொடுத்திடுவான்
அவனே
என்றும் எந்தன் உயிர்நண்பன்
எழுமை பிறப்பிலும் தொடர்நண்பன்
நன்றி மறவேன் என்நண்பா
நலமுற வாழ வாழ்த்துப்பா

தேக்கம் இன்றி கவிதைகளைத்
தெளிவாய் நானும் எழுதிடவே
ஊக்கம் தந்தது அவனன்றோ
உரமாய் இருந்தது அவனன்றோ

புலவர் சா இராமாநுசம்   ( மீள்பதிவு)

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...