Saturday, February 3, 2018

மறவாது எழுதுவேன்! மரபில் கவிதை –என் மனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே!

மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதைஎன்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றேபலர்
 இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானேஅன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கிடும்  மறுமொழி  தம்மைநீரும்
     வழங்கிட, வளர்ந்திட, வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ண தாமேதிரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கிபின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சில்  தாங்கி,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும்அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன்மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன்முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர்நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றேஎனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர்வாழ்
 நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!

Friday, February 2, 2018

நாள்தோறும் கவிதைதனை நானெழுத முயன்றாலும்


நாள்தோறும் கவிதைதனை
நானெழுத முயன்றாலும்
வாள்போலும் முதுகுவலி
வாட்டிடவே அயின்றாலும்
தோள்கொடுத்து காக்கின்றாள்
தூயத்தமிழ் அன்னையவள்
தாள்தொட்டு தொழுகின்றேன்
தவறாமல் எழுதுகின்றேன்


புலவர் சா இராமாநுசம்

Thursday, February 1, 2018

இதுவரையில் என்கவிதை மரபின் வழியே- நான் எழுதியது அனைத்துமென் அன்னை மொழியே!இதுவரையில்  என்கவிதை  மரபின் வழியே- நான்
   எழுதியது  அனைத்துமென்  அன்னை  மொழியே
புதுக்கவிதை  எழுதிவிட முயன்று  பார்த்தேன்-ஆனால்
   புரியவில்லை! வரவில்லை! உள்ளம்  வேர்த்தேன்!
எதுக்கவிதை  என்பதல்ல  எனது  நோக்கம் –நானும்
    எழுதிடவே எண்ணினேன் புதிய ஆக்கம்!
அதுவெனக்கு வரவில்லை! தோற்றுப்  போனேன்-ஆனால்
    ஆசைமட்டும் அடங்காத  ஒருவன்   ஆனேன்
   
இன்றில்லை! என்றாலும், வெற்றி பெறுவேன்! –மேலும்
    இயன்றவரை  முயன்றேதான் எழுதித்  தருவேன்
நன்றில்லை எனச்சொல்லி தள்ள மாட்டீர் –என்ற
    நம்பிக்கை  எனக்குண்டே எள்ள மாட்டீர்
கன்றில்லை என்றாலும் பசுவின் பாலை –யாரும்
    கறக்காமல்  விடுவாரா! ? பயணச்  சாலை
ஒன்றில்லை  என்றாலும்  முயலல்  தானே –பணியில்
    ஓய்வுற்ற எனவரையில் அறிவேன்  நானே !
 
புதுக்கவிதை எழுதுவதும்  புதுமை  என்றே –எனக்குப்
    புலப்படவும், புரிந்திடவும் உணர்ந்தேன்  நன்றே
இதுக்கவிதை எனச்சொல்ல எழுத  வேண்டும் –மேலும்
   எழுதிவிட  நாள்தோறும் நம்மைத் தூண்டும்
மதுக்கவிதை! படிப்போரின்  மனதை  மயக்கும் –என்றும்
    மறவாது !நினைத்தாலே  நெஞ்சம்  வியக்கும்
எதுக்கவிதை  என்றிங்கே   ஆய்தல்  வீணே –அதை
    எழுதியதும்  எவரெனவே  ஆய்தல் வீணே!
                 புலவர் சா இராமாநுசம்

Wednesday, January 31, 2018

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதைமுத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 

ஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்
ஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்
காயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்
காணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே
சாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ
சாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட
வாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது
வரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே

கொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக காட்டில்-ஈழ
குடும்பங்கள் வீழ்வதனை கண்டு ஏட்டில்
முத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ
மூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே
செத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு
சேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி
எத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது
எதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ

வீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்
வீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே
தீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு
திசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்
நேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்
நினைத்தபடி தனிஈழப் பரணி பாடி
கூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்
குமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே

இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்
எழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே
அரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்
அனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி
உறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்
உருகியழ வெள்ளமென கண்ணீர் பொங்கும்
தருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய
தருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்

அழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்கள்

ஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி       
கழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில
கயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்
விழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்
விளைவாக அணிதிரள விரைந்தே வருவார்
செழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்
சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்

புலவர் சா இராமாநுசம்      


Tuesday, January 30, 2018

ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி அடைவதற்குக் கூட்டணியா !? பாருமய்யா!ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி
அடைவதற்குக் கூட்டணியா !? பாருமய்யா!
சான்றோரே நாள்தோறும் செய்திவருதே –அரசியல்
சாக்கடையா !? ஐயகோ! துயரம்தருதே!
கொள்கையென ஏதொன்றும் தெரியவில்லை-என்ன
கூட்டணியோ ! கடவுளே! புரியவில்லை!
எள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள்
எண்ணியிதை ஆய்தாலோர் விடிவுவருமே!


நேற்றுவரை பகைவராம்! காணயின்றே –அந்த
நினைவின்றி சேர்வதா நாணமின்றே!
போற்றுவதா!? இச்செயலும் எண்ணவேண்டும்-நாளும்
புலம்புவதால் தீராது திண்ணமீண்டும்!
தூற்றுவதும் மாற்றுவதும் வழக்கமாக-மெகாத்
தொடராக ஆற்றுவதும் பழக்கமாக!
சாற்றுவதா!? இக்கொடுமை ஆயவேண்டும் –உடன்
சரிசெய்த பின்பேநாம் ஓயவேண்டும் !

புலவர் சா இராமாநுசம்

Monday, January 29, 2018

ஊறுவர வேண்டாமே தமிழ்மணமே-ஆய்ந்து உடன்களைய வேண்டுகிறேன் தமிழ்மணமே

தாறுமாறாய் உள்ளதாக தமிழ்மணமே-பதிவர்
   தரவரிசை பட்டியலும் தமிழ்மணமே
கூறுகின்றார் பலரிங்கே தமிழ்மணமே-உள்ளம்
   குமுறுகின்றார் சிலரிங்கே தமிழ்மணமே
பேறுபெற்றோம் அனைவருமே தமிழ்மணமே-அந்த
   பெருமைக்கு என்றென்றும் தமிழ்மணமே
ஊறுவர வேண்டாமே தமிழ்மணமே-ஆய்ந்து
   உடன்களைய  வேண்டுகிறேன் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...